நிஃப்டி 50-ல் இணையும் ஜியோ, சொமாட்டோ!
நிதிச் சேவைகளை வழங்கிவரும் ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் மற்றும் சொமாட்டோ ஆகிய இரு நிறுவனங்களும் நிஃப்டி 50 பட்டியலில் இணையவுள்ளன.
நிஃப்டி 50 குறியீட்டில் இருந்து வெளியேறும் இரு நிறுவனங்களுக்கு பதிலாக இவை இணையவுள்ளன.
இது குறித்து ஜே.எம். ஃபினான்சியல் நிறுவனத்தின் நிபுணர்குழு குறிப்பிட்டதாவது,
நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய இரு நிறுவனங்கள் நிஃப்டி பட்டியலில் இருந்து வெளியேறவுள்ளன.
நிஃப்டியில் ஏற்படும் இந்த மாற்றங்கள் குறித்து பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். மார்ச் 31 க்குள் இதில் ஏற்படும் மாற்றங்கள் சமநிலைப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டானியா நிறுவனத்துக்கு பதிலாக எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் நிஃப்டி 50 யில் இருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பிரிட்டானியா வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ., 45 பங்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, சொமாட்டோ மற்றும் ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் அதிகாரப்பூர்வமாக நிஃப்டி பட்டியலில் இணையும்.
ஜியோ ஃபினான்சியல் சர்வீஸ் நிறுவனம் நிஃப்டியில் இணைவதன் மூலம் 356 மில்லியன் டாலர் முதலீடுகளுக்கு வழிவகுக்கும். பிரிட்டானியா வெளியேறுவதன் மூலம் 229 மில்லியன் இழப்புக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?