இந்தியாவில் முதல்முறையாக தேசிய மஞ்சள் வாரியம் தொடக்கம்!
நிஸாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று(ஜன. 14) தொடங்கி வைத்தார். மஞ்சள் வாரிய தலைவராக பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய மஞ்சள் வாரிய தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், “உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 70 சதவிகிதம் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் இந்தியாவில் 30 வகையான மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள மஞ்சள் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கில் தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மஞ்சள் வாரியத்தில் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சளின் மருத்துவ பண்புகள், அதன் விளைச்சலை அதிகரிப்பதற்கான வழிகள், மஞ்சள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வழிகள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் மஞ்சள் வாரியம் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.