தஞ்சை பெருநந்திக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறி, பழங்களால் அலங்காரம்!
`தெப்பம் கட்டி கன்னிமாரு சாமி வெச்சு...!' - மேற்கு மாவட்ட மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
தைப்பொங்கலுக்கு அடுத்த நாளு மாட்டுப்பொங்கலு. இந்தப் பொங்கலை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடுவாங்க. மேக்க இருக்க கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, அதை சுத்தி இருக்க ஊர்ல மாட்டுப்பொங்கலை எப்படி கொண்டாடுவாங்கனு தெரிஞ்சுக்கத்தான் இந்தக் கட்டுரை.
'என்னடா இது மேக்க...கேக்க?'னு நினைக்காதீங்க. 'நேட்டிவிட்டி'யோட இருக்கலாம்னு தான் மேக்கு மாவட்ட ஸ்லாங்கோட போகுறோம்.
எந்த நோம்பி (பண்டிகை) வந்தாலும், வீட்டுல இருக்க பொருட்களை சுத்தம் செஞ்சு ஓர்சல் (ஓரங்கட்டி) பண்ணி சாணி எல்லாம் முன்னாடி நாளே வழிச்சு (மெழுகி) விட்டுருவாங்க. பொங்கல் பண்டிகைக்கு போகி அன்னைக்கே எல்லா வேலைகளையும் முடிச்சு வீடு தொடங்கி மாட்டு தொழுவம் வரை எல்லாம் இடத்துலயும் காப்பு கட்டுவாங்க.
மாடு வெச்சுருக்கவங்க தைப்பொங்கலை விட, மாட்டுப்பொங்கலுக்கு தான் நெம்ப (ரொம்ப) முக்கியத்துவம் தருவாங்க. மாட்டுப்பொங்கல் அன்னைக்கு எந்திரிச்சு அவங்க தோதுக்கேத்த மாதிரி காலைல இல்லைனா, பொழுது சாஞ்சப்புறம் பொங்கல் வெப்பாங்க.
இவ்வளவு தானானு அசால்டா நினைச்சுடாதீங்க. இதுக்கு முன்னால அத்தனை வேலை இருக்காக்கும். முதல்ல, மாட்டுக்கு தண்ணீ வாத்துவிட்டு (குளிக்க வைத்து) மூக்கணாம் கயிறு, தாம்பு கயிறு, திருகாணி புதுசா போட்டு விடுவாங்க. அப்புறம், மாட்டு கொம்புக்கு காவி (நீங்க நினைக்கற காவி இல்ல) அடிப்பாங்க. ஆனா, காலம் மாறிப்போச்சு...இப்போலாம் பெயின்ட் தான் அடிக்கறாங்க.
மாட்டுப்பொங்கலுக்கு முன்னாடி நாளு, தொழுவத்துல மாடு போட்ருக்க சாணிய எடுத்து வெச்சுப்போம். அது எதுக்குனா, தெப்பம் கட்ட.
கோயில்கள்ல தெப்பக்குளம் பாத்துருப்போம்ல. அதோடு இத்துக்குண்டு (சின்ன) சைஸ் தான் இந்தத் தெப்பம். இதை மாட்டுப்பொங்கல் அன்னைக்கு கட்டுவாங்க.
தெப்பம் கட்டி தெப்பத்தோட ஒரு வடும்புல கன்னிமாரு சாமியை நினைச்சு ஏழு முக்கோண கல்லுகளை வெப்பாங்க. அடுத்ததா, பொங்கல் வெக்கறதுக்கு மூணு கல்லு வெச்சு அடுப்பை கூட்டுவாங்க.
அந்தன்னைக்கு மட்டும் பொங்கல் வெக்கறதுக்கு முன்னாடியே எத்தனை மணியா இருந்தாலும் பால் கறந்துடுவாங்க. ஒருவேளை, தொழுவத்துல இருக்க எதாவது ஒரு மாட்டுக்கு கன்னு இருந்தா, அந்த மாட்டுல மட்டும் பால் கறக்கமாட்டாங்க. அதோட பாலு கன்னுக்கு தான்னு விட்ருவாங்க.
பால் கறந்தப்புறம், பொங்கல் வெக்க தொடங்குவாங்க. பொங்கல்னா சர்க்கரை பொங்கல் இல்ல...வெள்ளைப்பொங்கல். தெளிவா சொல்லணும்னா பச்சரிசி பொங்கல். இன்னொரு பக்கம், மாட்டு கொம்புகளுக்கு பொட்டு போடுவாங்க. அடுத்ததா, தெப்பத்தோட ரெண்டு பக்கமும் கரும்பை வளைவு மாதிரி கட்டி, அதுல மொடக்கத்தான் கொடி தோரணம் மாதிரி கட்டிவிடுவாங்க.
பொங்கல் பொங்குனதும், அந்தப் பொங்கலை தெப்பத்துக்கு படைப்புப்போட்டு, தெப்பத்துக்குள்ள காசு போடுவாங்க. இந்தக் காசு எதுக்குனா, மாடு மேய்க்கறவங்களுக்கு. மாடு மேய்க்கற ஆளு இருந்தாங்கனா, அவங்க அந்தக் காசை எடுத்துப்பாங்க. அப்படி யாரும் இல்ல...வீட்டுல இருக்க ஆளுங்க தான் மாடு மேய்க்கறாங்கனா, வீட்டுல இருக்க பொடுசுங்க (சின்ன பசங்க) அந்தக் காசை எடுத்துப்பாங்க. அதுக்கு பெரிய போட்டியே நடக்கும்.
காலையில யாரு சீக்கிரம் எந்திரிக்கறாங்களோ, அவங்களுக்கு தான் அந்தக் காசு. அதனால, அதை எடுக்கறதுக்காகவே, காலையில சீக்கிரம் எந்திரிக்கறதுனு ஒரு அக்கப்போரே நடக்கும்.
சரி...சரி...இப்போ சாமி கும்பிடறதுக்கு வருவோம். தெப்பம் கட்டி, சாமி கும்பிட்டதும், தொழுவத்துல இருக்க சின்ன கன்னை கூட்டிட்டு வருவோம். சுத்தி இருக்கற பொடுசுங்க தட்டை கரண்டி வெச்சு தட்டுவாங்க. அந்த சத்தத்துக்கே, கன்னு தொழுவத்தை தாண்டிடும்.
பொங்கல் வெச்சதுகப்புறம், மாட்டுக்குனே ஒரு கொழம்பு வெப்பாங்க. அந்தக் கொழம்போட, பச்சரிசி சாப்பாட்டை போட்டு மாட்டுக்கு மட்டும் விருந்து மாதிரி படையல் வெப்பாங்க.
அப்புறம் என்ன...வெள்ளைப்பொங்கல்ல கொஞ்சுண்டு வெல்லம், வாழைப்பழம் போட்டு ஆள் ஆளுக்கு சாப்பிட்டு, வீட்டுக்கு வந்துருக்க ஒரம்பரைக்கும் (உறவுகளுக்கும்) கொடுத்துட்டு பேச்சும், சிரிப்பு சத்தமுமாய் முடியும் மாட்டுப்பொங்கல்.!