கார் பார்க்கிங் தகராறு; செக்யூரிட்டி மீது துப்பாக்கிச் சூடு.. போதை ஆசாமி கைது!
Russia: உக்ரைன் போரில் கேரள இளைஞர் மரணம்; ஆபத்தில் 67 இந்தியர்கள் -வெளியுறவுத்துறை சொல்வதென்ன?
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய இராணுவ ஆதரவு சேவையில் (Russian Military Support Service) முன்களத்தில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ரஷ்ய அரசுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, போரில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மற்ற இந்தியர்களை முன்னதாகவே தாயகம் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
"மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிகாரிகளிடமும், டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளிடமும் இதுகுறித்து வலுவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருக்கும் இந்தியர்களை முன்னதாகவே அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளோம்" என வெளியிறுவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் பினில் டி.பி. இவர் ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உக்ரைனின் ஒரு பகுதியில் போரில் ஈடுபட்டபோது இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினில் உடன் ரஷ்யா சென்ற அவரது மைத்துனர் ஜெயின் டி.கேவும் ரஷ்யாவுக்காக போரில் ஈடுபட்டு காயமடைந்துள்ளார்.
32 வயதான பினில் மற்றும் 27 வயதான ஜெயின், இருவரும் ஐடிஐ டிப்ளமோ படித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ரஷ்யாவில் எலெக்ட்ரீசியன் மற்றும் பிளம்மர் வேலைக்காக சென்றுள்ளனர்.
அவர்கள் ரஷ்யா சென்றதுமே அவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரஷ்ய இராணுத்தில் பணியாற்ற போர் நடக்கும் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், இறந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரகம் குடும்பத்தினதுடன் தொடர்பில் உள்ளது. எங்களால் முடிந்த உதவிகள் வழங்கப்படுகிறது. ரஷ்ய அதிகாரிகளிடம் பேசி விரைவாக இறந்தவரின் உடலைப் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். காயமடைந்த நபரையும் விரைவாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வலியுறுத்துகிறோம்" என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்திற்கு சேவையாற்றி இதுவரை 8 இந்தியர்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மரணங்கள் குறித்து உறுதியாக அறிவித்த வெளியுறவுத்துறை, மேலும் 63 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப்படைகளில் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளது. இவர்கள் விரைவாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவத்துக்காக சட்டப்பூர்வமாக இந்தியர்கள் அழைத்துச்செல்லப்பட்டனரா அல்லது எந்த வகையில் ஆட்சேர்ப்பு நடைபெற்றது என்ற விவரங்களை வெளியிட வெளியுறவுத்துறை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.