பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு! 14 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு!
20 years of Thirupachi: ``அப்போ விஜய் சாரை எதிரியாகதான் பார்த்தேன்!'' - நினைவுகள் பகிரும் ஆர்யன்
`திருப்பாச்சி' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
இயக்குநர் பேரரசு இயக்குநராக அறிமுகமான திரைப்படம் `திருப்பாச்சி'தான். அவருடைய ஊர் பெயர்க் கொண்ட படங்களின் ஹிட் வரிசையும் இப்படத்திலிருந்துதான் தொடங்கியது. விஜய்க்கும் இத்திரைப்படம் அப்போது பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. மாஸ் ஃபைட் சீன், அண்ணன் - தங்கை சென்டிமென்ட் என பல என்டர்டெயினிங் எலமென்ட்டுகள் கொண்ட `திருப்பாச்சி', இப்போதும் பலரின் ஃபேவரிட் கமர்சியல் படங்களில் முக்கிய இடத்தில் இருக்கிறது.
இத்திரைப்படத்தில் `பான் பராக்' ரவி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்திருந்தார். அவருக்கு இத்திரைப்படம் அப்போது லைம் லைட்டுடன் ஒரு அடையாளத்தையும் தேடி தந்தது. 20 ஆண்டுகள் கடந்ததையொட்டி அவரிடம் பேசினோம்.
`வாய்ப்புக் கிடைச்சதே பெரிய கதை...’
`பான் பராக்' ரவி கதாபாத்திரத்தின் நினைவுகளை பகிர தொடங்கிய நடிகர் ஆர்யன், ``20 வருஷம் ஆகிடுச்சு. `திருப்பாச்சி' படத்துல எனக்கு வாய்ப்புக் கிடைச்சதே பெரிய கதை. `திருப்பாச்சி'க்கு முக்கிய காரணம் நான் அதுக்கு முன்னாடி பண்ணின ஸ்ரீகாந்தோட `போஸ்' திரைப்படம்தான். அந்தப் படத்துல நான் ஒரு தீவிரவாதியாக நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல என்னோட ஒரு வடஇந்திய நடிகர் நடிச்சிருந்தார். நான் தினமும் படப்பிடிப்பு தளத்துக்குப் போனதும் எல்லோருக்கும் விஷ் பண்ணுவேன். விஷ் பண்ணாததுனால என்மேல கோபப்பட்டுவாங்கனு எனக்குள்ள ஒரு பயம் இருந்தது.
ஆனால், அந்த வட இந்திய நடிகர் வந்ததும் செட்ல இருக்கிற அத்தனை பேரோட கவனமும் அவர் பக்கம் திரும்பிடும். நம்ம ஏன் இப்படி இருக்கோம், அவருக்கு கிடைக்கிற விஷயங்கள் நமக்கு கிடைக்கமாட்டேங்குதுனு தோனுச்சு. அதன் பிறகு, ஒரு நாள் சில மிஸ்டேக்னால ஷூட்டுக்கு டம்மியாக ரெடி பண்ணி வச்சிருந்த கன் வெடிச்சிடுச்சு. எல்லோரும் அவரை முதல்ல போய் கவனிச்சாங்க. என்னை யாருமே கவனிக்கல. அவர்கிட்ட இருக்கிற ஆளுமை திறன் நம்மகிட்ட இல்ல.
திருப்பாச்சி...
நம்மளும் ஒரு பெரிய படத்துல ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல நடிக்கணும்னு யோசிச்சேன். அதே மாதிரியான கவனம் நம்ம பக்கம் திரும்பணும்னு ஆசைப்பட்டேன். அப்போ என்னுடைய நண்பன் ஒருவர் `திருப்பாச்சி'னு ஒரு படம் விஜய் சார் நடிக்கப் போறார்னு சொன்னான். `இந்த படத்துல ஏதோ நமக்கு வாய்ப்பு கிடைக்குனு தோனுது'னு சொன்னான்.
முயற்சி பண்ணி பார்ப்போம்னு...நான் என்னுடைய போட்டோ ஆல்பத்தை என் நண்பங்கிட்ட கொடுத்து டைரக்டர் ஆஃபீஸ்ல கொடுக்கச் சொன்னேன். அப்போக்கூட நான் எந்த இடத்துலையும் போய் நிக்கக்கூடாதுனு அவன்கிட்ட கொடுத்துவிட்டேன். பிறகு, ரெண்டு நாட்கள் கழிச்சு இயக்குநரை நான் போய் மீட் பண்ணினேன். அவருக்கு என்னுடைய லுக் பிடிச்சிருந்தது. ஆனால், நான் ஒல்லியாக இருந்ததுனால ஃபைட் சீன்லாம் வருமானு யோசிச்சாரு. அதுக்கப்புறம் டெஸ்ட் ஷூட் வச்சுப் பார்த்தாரு. வாய்ப்புக்கான தேடல்ல இருந்த வெறில நடிச்சு காமிச்சேன். அது அவருக்கு ரொம்ப பிடிச்சு படத்துக்கு என்னை தேர்ந்தெடுத்தாரு. அப்புறம் தியேட்டர்ல படம் பார்க்கும்போது மக்கள் கொடுத்த வரவேற்பு என்னை நெகிழ வச்சது.
`டேய் பான் பராக் ரவி'டானு கத்தினாங்க'
அப்படி தியேட்டர் விசிட் போகும்போது நானும் பேரரசு சாரும் தியேட்டர் வெளில இருந்தோம். என்னை பார்த்ததும் ஒரு விதமான ஆதிர்ச்சியுடன் `டேய் பான் பராக் ரவி'டானு சிலர் கத்தினாங்க. அதெல்லாம் மறக்க முடியாத தருணங்கள்." என்றவர், `` படப்பிடிப்பு தளத்துல நான் பெருசா விஜய் சார்கிட்ட பேசமாட்டேன். அந்த கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருக்கணும்னு அப்போ நினைச்சுட்டு படப்பிடிப்பு தளத்துல விஜய் சாரை எதிரியாகதான் பார்த்துட்டு இருந்தேன். அவர் எப்போதும் அமைதியாகதான் இருப்பாரு. சில காட்சிகள்ல நான் இப்படி பண்றேங்கிற மாதிரியான விஷயங்களை மட்டும் சொல்லுவார்.
பேரரசு சாருக்கு இந்த கதாபாத்திரத்துக்கு சில ரெக்கமென்டேஷன்ஸ் வந்திருக்கும். படத்துல நாம் கமிட்டானதுக்குப் பிறகும் உதவி இயக்குநர்கள் எனக்கு கால் பண்ணி `பெங்களூருல இருந்து ஒரு ஆர்டிஸ்ட் வந்திருக்காங்க. அவரை நீங்க நடிக்கவிருந்த கேரக்டர்ல நடிக்க வைக்கலாம்னு பேசுறாங்க'னு சொல்வாங்க. அந்த வார்த்தையெல்லாம் கேட்கும்போது ரொம்பவே பயமாக இருந்தது. ஆனால், இந்த விஷயத்தையெல்லாம் தாண்டி `பான் பராக் ரவி' கேரக்டர் எனக்கு வந்துச்சு. அதை சரியாக பண்ணிடனும்னு கூடுதல் பொறுப்பு இருந்தது. இன்னைக்கு வரைக்கும் `பான் பராக் ரவி' கதாபாத்திரத்தை வச்சு என்னை அடையாளப்படுத்துறாங்க.'' எனக் கூறி முடித்துக் கொண்டார்.
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...