பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு! 14 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு!
தெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகர் விக்ரம் பிரபு! புதிய போஸ்டர் வெளியீடு!
நடிகர் விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜன.15) அவரது முதல் தெலுங்கு திரைப்படத்தின் போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, கடந்த 2012ஆம் ஆண்டு பிரபு சாலமனின் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த படம் பெரும் வெற்றி அடைந்திருந்தாலும், அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரியளவில் வெற்றியை அளிக்கவில்லை.
கடந்த 2022ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான டாணாக்காரன் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான தமிழ் இயக்கியிருந்தார். நேரடியாக ஒடிடியில் வெளியான அந்த திரைப்படம் விக்ரம் பிரபுவிற்கு ஓர் ”கம் பேக்” ஆகவே அமைந்தது. கடைசியாக 2023 ஆம் ஆண்டு யுவராஜ் தயாளன் இயக்கிய இறுகப்பற்று திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இயக்குநர் கிரிஷ் ஜகர்லாமுடி இயக்கத்தில் ’காட்டி’ (GHAATI) எனும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜன.15) அந்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:விரைவில் 'வாடிவாசல்' படப்பிடிப்பு!
இந்த திரைப்படத்தின் மூலம் விக்ரம் பிரபு தெலுங்கு திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார்.
இரண்டு முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணியின் கலையில், இசையமைப்பாளர் நாகவெள்ளி வித்யாசாகர் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கிறார். அவர் இருக்கும்படியான போஸ்டர்கள் முன்னதாக வெளியானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகின்ற ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
’காட்டி’ எனும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த திரைப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ஆக்ஷ்ன் திரைப்படமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் தற்போது நடிகர் விக்ரம் பிரபுவும் உள்ளார் எனும் செய்தி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் சிறப்பு க்ளிம்ப்ஸ் இன்று (ஜன.15) மாலை 4.30 மணியளவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, இயக்குநர் கிரிஷ் தமிழில் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமான ”வானம்” மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆர் இன் சுயசரிதை ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.