Doctor Vikatan: `Game Changer' ராம் சரண்: திக்குவாய் பிரச்னையிலிருந்து முழுமையாக மீள முடியாதா?
Doctor Vikatan: சமீபத்தில் வெளியான 'Game changer' படத்தில் ஹீரோ ராம் சரணுக்கு திக்குவாய் பிரச்னை இருக்கும். ஆற்று நீரில் மூழ்கி கத்துவது, நாவில் மருந்து தடவுவது என என்னென்னவோ சிகிச்சைகளை முயற்சி செய்வார். ஆனாலும், அவரது திக்குவாய் பிரச்னை சரியாகாது. நிஜத்திலும் இப்படித்தானா... திக்குவாய் பிரச்னையை நிரந்தரமாக குணப்படுத்தவே முடியாதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ்
திக்குவாய் பிரச்னை சாதாரணமாக குழந்தைப் பருவத்தில் தொடங்குகிறது. அரிதாக அந்தப் பிரச்னை சில சமயங்களில் வயதானவர்களுக்கு, தலையில் ஏற்படும் காயம் அல்லது நரம்பியல் பிரச்னைகளால் ஏற்படலாம். திக்குவாய் பிரச்னை ஏற்படுவதற்கான மூல காரணமும் சில குழந்தைகளுக்கு மட்டும் ஏன் அந்தப் பிரச்னை வருகிறது என்பதும் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை.
திக்குவாய் பிரச்னையின் பின்னணியில் பரம்பரைத்தன்மைக்கும் சிறு பங்கு உண்டு. அதாவது குடும்பத்தில் யாருக்காவது திக்குவாய் பிரச்னை இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களுக்கும் அது பாதிக்கலாம். ஆனால், நீரிழிவு பாதிப்பு போல, திக்குவாய் பிரச்னையின் பின்னணியிலும் பரம்பரைத்தன்மையைத் தாண்டி வேறு பல காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக 2 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை சாதாரணமாக வரும். திடீரென்று ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. பெரியவர்களுக்கு திடீரென திக்குவாய் வந்தால் நரம்பியல் பிரச்னைகள் காரணமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
திக்குவாய் பிரச்னைக்கான முதலும் முக்கியமுமான சிகிச்சை, ஸ்பீச் தெரபி (speech therapy) எனப்படும் பேச்சுத்திறன் சிகிச்சைதான். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதிலிருந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கும். நாள்பட நாள்பட முழுமையாக நிவாரணம் கிடைக்கும் வாய்ப்பும் குறையலாம். தவிர, சிகிச்சை தேவைப்படும் நேரமும் அதிகரிக்கலாம்.
சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். பாதிக்கப்பட்ட நபர்களை கேலி செய்வது அல்லது அவர்களது பிரச்னையைக் குத்திக் காட்டுவது, அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட காரணமாகலாம். அந்தத் தாழ்வு மனப்பான்மை அவர்களது சிகிச்சையை தாமதப்படுத்தலாம் அல்லது பின்னடையச் செய்யலாம். பொறுமை மற்றும் ஆர்வத்துடன் பேச்சுப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு முழுமையாக இந்தப் பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.