Sexual Health: வளைந்த ஆணுறுப்பு வாழ்க்கையைக் கெடுக்குமா? | காமத்துக்கு மரியாதை -...
`காதலனை திருமணம் செய்ய எதிர்ப்பு' - போலீஸார் கண்முன்னே மகளை சுட்டுக் கொன்ற தந்தை
பெற்றோர்கள் பெரும்பாலும் காதலை விரும்புவதில்லை. ஒரு சில பெற்றோர் மட்டுமே தங்களது பிள்ளைகள் விரும்பும் நபர்களையே திருமணம் செய்து வைக்கின்றனர். மத்திய பிரதேச மாநில குவாலியர் என்ற இடத்தில் தங்களது விருப்பத்தை மீறி வேறு ஒருவரை திருமணம் செய்ய நினைத்த மகளை தந்தை சுட்டுக்கொலை செய்துள்ளார்.
குவாலியரில் உள்ள கோலா கா மந்திர் பகுதியில் வசிப்பவர் மகேஷ். இவரது மகள் தானு (20). இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆக்ராவை சேர்ந்த விக்கி என்பவரை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்யவும் முடிவு செய்தார். ஆனால், பெற்றோர் குறிப்பாக தந்தை மகேஷ் விக்கியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தானுவின் எதிர்ப்பை மீறி அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுப்பட்டுவிட்டது. திருமணத்திற்கு 4 நாள்களே இருந்த நிலையில் தானு வீடியோ ஒன்றை பதிவு செய்து அதனை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில், தனது பெற்றோர் தனது விருப்பத்திற்கு எதிராக வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். தனக்கு எதாவது நடந்தால் தனது தந்தை மகேஷ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்தான் அதற்கு பொறுப்பு. நான் ஆறு ஆண்டுகளாக காதலித்து வரும் விக்கியை திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. தினமும் என்னை அடித்து உதைக்கின்றனர். கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே எனக்கு எதாவது நடந்தால் எனது குடும்பத்தினர்தான் பொறுப்பு என்று குறிப்பிட்டு இருந்தார். 52 வினாடி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவிய நிலையில், உடனே போலீஸார் அன்று இரவே மகேஷ் வீட்டிற்கு வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டண்ட் தரம்வீர் சிங் தலைமையில் போலீஸார் வந்திருந்தனர்.
ஒரே நேரத்தில் அதிகமான போலீஸார் வந்ததால் அந்த ஊர் பஞ்சாயத்து பிரமுகர்களும் வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். தனது மகளிடம் தனிப்பட்ட முறையில் பேசி சம்மதிக்க வைக்கப்போகிறேன் என்று மகேஷ் தெரிவித்தார். தானு தான் வீட்டில் இருக்க விரும்பவில்லை என்றும், அரசு பெண்கள் முகாமில் என்னை சேர்த்து விடுங்கள் என்று போலீஸாரிடம் தெரிவித்தார். மகேஷ் தனது மகளை தனியாக அழைத்துச்சென்று பேசிக்கொண்டிருந்தார். அருகில் போலீஸாரும், பஞ்சாயத்தாரும் நின்று கொண்டிருந்தனர்.
அந்நேரம் யாரும் எதிர்பாராத விதமாக மகேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது மகளின் நெஞ்சுப்பகுதியில் சுட்டார். மகேஷுடன் நின்று கொண்டிருந்த அவரது உறவினர் ராகுலும் தொடர்ந்து தானுவை சுட்டார். துப்பாக்கியால் சுட்டதில் சரிந்து விழுந்த தானு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை பார்த்து போலீஸாரும், பஞ்சாயத்தாரும் அதிர்ச்சியடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேரையும் பிடிக்க முயன்றனர். போலீஸார் பிடிப்பதற்குள் சம்பவ இடத்தில் இருந்து ராகுல் ஆயுதத்துடன் தப்பி ஓடிவிட்டார். மகேஷ் மட்டும் பிடிபட்டுள்ளார். அவர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தானுவின் சோசியல் மீடியா பக்கத்தையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தப்பியோடிய ராகுலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸார் கண் முன்பு நடந்த இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.