புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை-யில் நண்பருடன் இருந்த மாணவியிடம் அத்துமீறல் – மூடி...
``மிளகாய் பொடியை தூவி தங்க செயினை திருட முயற்சி'' -தலைமுடியை பிடித்து அடித்து விரட்டிய மூதாட்டி!
மும்பையில் மூதாட்டி ஒருவர் திருட வந்தபெண்ணுடன் போராடி தங்க செயினை தக்கவைத்துக்கொண்டார். மும்பை மலாடு மேற்கு பகுதியில் வசிப்பவர் ஆயிஷா ஷேக்(91). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது பர்தா அணிந்த ஒரு பெண் திடீரென வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அப்பெண் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.
அதிர்ச்சியடைந்த மூதாட்டி, உடனே சுதாரித்துக்கொண்டு திருட வந்த பெண்ணின் தலைமுடியை பிடித்துக்கொண்டார். திருட வந்த பெண் மூதாட்டியின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக சமையல் அறையில் இருந்து மூதாட்டியை இழுத்துக்கொண்டே முன் அறைக்கு வந்தார். அங்கு வந்த போது மூதாட்டி வீட்டில் கிடந்த சில்வர் கிளாஸ் ஒன்றை எடுத்து திருட வந்த பெண்ணை தாக்கினார். உடனே, அப்பெண் தங்க செயினை எடுக்காமல் வெறும் கையோடு தப்பி ஓடிவிட்டார்.
மூதாட்டியின் மகன் வெளியில் சென்று இருந்தார். அவர் வந்தவுடன் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விரைந்து செயல்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அப்பெண்ணை கைது செய்தனர்.
இது குறித்து, ஆயிஷா ஷேக் கூறுகையில்,''நான் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது யாரோ வீட்டிற்குள் நுழைந்தனர். உடனே, நான் திரும்பி பார்த்தபோது ஒரு பெண் என் கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு எனது கழுத்தில் கிடந்த தங்க செயினை பறிக்க முயன்றார். உடனே நான் அப்பெண்ணின் தலைமுடியை பிடித்துக்கொண்டேன். இதனால் அப்பெண்ணை என்னை வீட்டின் முன்வாசல் வரை இழுத்து வந்தார். அப்போது வீட்டில் இருந்த ஒரு சில்வர் கிளாஸை எடுத்து அப்பெண் மீது அடித்தேன். இதனால் அவர் தப்பித்து ஓடி விட்டார்'' என்றார்.