முத்துக்குமரனைத் தொடர்ந்து பணப்பெட்டியை எடுத்த மற்றொரு போட்டியாளர்!
BB Tamil 8 Day 100: பணப்பெட்டி டாஸ்க், திடுக்கிடும் ட்விஸ்ட், நம்ப முடியாத ரிஸ்க்கை எடுத்த முத்து
இன்றைய எபிசோடில் பல சம்பவங்கள். பொங்கல் கொண்டாட்டம், அன்ஷிதாவின் வருகை, பணப்பெட்டிக்காக தன்னுடைய நூறு நாள் உழைப்பை பணயமாக வைத்து முத்துக்குமரன் எடுத்த அபாரமான ரிஸ்க் விஷாலுக்கு ஆதரவாக நின்ற அன்ஷிதா என்று பல விஷயங்கள் நடந்தன.
ஆனால் இந்தப் பணப்பெட்டி டாஸ்க்கின் விதியில் ஓர் அநீதி இருக்கிறது. என்னவென்று விரிவாகப் பார்ப்போம். அதறகு முன்பாக, நூறாவது நாளை வெற்றிகரமாகதாண்டியிருக்கும் (முடியலைங்க.. .. முடியல) என்னை வாழ்த்துங்களேன் ப்ளீஸ்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 100
‘சூரியனுக்கே டார்ச் லைட்டா?’ என்கிற மாதிரி காலைச் சூரியனின் மீது காமிரா ஃபோகஸ் செய்தது. பொங்கல் திருநாள் மரியாதையாம். இன்றைய வேக் அப் பாடல், இளையராஜாவின் ‘குடும்பப் பாடல்’ எனலாம். வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில் ‘கோவா’ திரைப்படத்தில் வந்த பாடல் என்பதால் ராஜாவின் வாசனையை உணர முடியும்.
போட்டியாளர்களுக்கு மதியம் பொங்கல் விருந்து. உணவுகளை நம் வீட்டில் கொண்டு வந்து தரும் ஒரு ஆப் ஸ்பான்ஸர் செய்திருந்தது. மெனு கார்டில் என்ன வேண்டுமோ அதை டிக் செய்யலாமாம். (நம்மிடமிருந்து துட்டு பிடுங்கி இப்படி விளம்பரத்திற்காக இறைக்கிறார்கள் போல!). இன்னொரு பிராண்ட், பாரம்பரிய உடைகளை தந்து போட்டியாளர்களை மகிழ்வித்தது.
ரஞ்சித்தைப் பற்றி கூட புகார் வருவது ஆச்சரியம்தான். பொங்கல் நன்னாளில் அதைச் செய்தவர் ரயான். இவர் ரஞ்சித்திடம் சரியாகப் பேசாதது போல் ரஞ்சித் உணர்ந்திருக்கிறார் போல. TTF வென்று விட்ட திமிர்தான் காரணமோ?! அதற்காக ஒரு குதிரைக் கதையை ரஞ்சித் சொல்ல அதை தனக்கானதாக எடுத்துக் கொண்ட ரயான் மனம் புண்பட்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார். “டேய்.. அவ்ளோலாம் திங்க் பண்ணாத. அவரு கேஷூவலா வேற எதுக்கோ சொல்லியிருக்கலாம்” என்று சமாதானப்படுத்தினார் சிவா. “உன் வெற்றிக்குப் பின்னால உன்னோட உழைப்பு இருக்குல்ல. அப்புறம் என்ன விடு” என்பது போல் ஆறுதல் சொன்னார் ஜாக்.
ரஞ்சித் உண்மையிலேயே ரயானின் புறக்கணிப்பைப் பார்த்து விட்டு சீண்டுவதற்காக கதை சொன்னாரா? அல்லது அவர் தற்செயலாக சொன்ன கதையை ரயான் அப்படியாகப் புரிந்து கொண்டாரா? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் குதிரை. தான் அடைந்த வெற்றி மீது ரயானுக்கே முழு நம்பிக்கையில்லையா?! மனித மனது விசித்திரமானது.
வீட்டிற்குள் வந்த ஹீரோ ராஜூ பாய்
பாடல் ஒலித்தது. ஐந்தாவது சீசனில் கோப்பையை வென்ற ராஜூ ஜெயமோகன் உள்ளே வந்தார். (ஜெயமோகன் என்கிற பெயரில் ஒரு மகத்தான தமிழ் எழுத்தாளர் இருப்பதை அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்!) அதே பாண்டியராஜன் முழியுடன் இருந்தாலும் ஹீரோ லுக்கிற்கு மாறியிருந்தார் ராஜூ பாய்.
“நான் உள்ளே வந்தது போட்டியெல்லாம் நடத்த இல்லை. டென்ஷன் ஆவாதீங்க. வீடு இரண்டு அணியா பிரிஞ்சு பொங்கல் வைக்கணும். யாருடைய பொங்கல் சிறப்புன்னு சாப்பிட்டு பார்த்து சொல்ற வேலையை எனக்கு கொடுத்திருக்காங்க. அம்புட்டுத்தான் விஷயம். சட்டுப்புட்டுன்னு ஆவற வேலையைப் பாருங்க” என்கிற மாதிரி தான் வந்த விஷயத்தை தெளிவுப்படுத்தினார் ராஜூ.
முத்து மாதிரி ஒரு proactive ஆசாமி இருந்தால், எந்தக் கூட்டத்திலும் வேலைகள் மளமளவென நடக்கும். ‘நீ இங்க வா.. நீ இங்க நில்லு’ என்று படபடவென உத்தரவுகள் இட்டு தலைமை தாங்கி வேலையை விரைவாக நகர்த்திச் செல்வார்கள். இப்போதும் முத்து அப்படியே செயல்பட்டு ‘வா.. வா… அரிசியை எடு.. ராஜூண்ணே.. வெல்லத்தைப் போடுங்க’ என்று ஸ்பீடாக செயல்பட்டதில் அவருடைய அணியில் இருந்துதான் முதலில் பொங்கல் பொங்கியது. பானையைக் கிளறியவர் தர்ஷா என்பது குறிப்பிடத்தகுந்தது.
இரண்டு அணியின் இனிப்பு பொங்கலையும் கிண்டல்களுடன் சாப்பிட்டு ருசித்த ராஜூ, எவருடைய மனதும் புண்படாமல் ‘எட்டை திருப்பிப் போட்டா என்ன வரும்.. அதேதான். இரண்டு டீமின் பொங்கலும் சிறப்பு. இது சீசன் எட்டு பொங்கல்” என்று சேஃப்பாக தீர்ப்பு சொன்னார். (ஹீரோவாயிட்டாலே இப்படித்தானோ?.. அனைவரின் சப்போர்ட்டும் தேவைப்படும்ல?!).
பொங்கல் தின்றதைத் தாண்டி வந்த விஷயத்திற்கு வந்தார் ராஜூ. அவர் ஹீரோவாக நடிக்க ஒரு திரைப்படம் வெளியாகிறது. தலைப்பு ‘பன் பட்டர் ஜாம்’. இதில் இரண்டு பாடல்களை எழுதியவர் நம்ம ‘சேது அணணன்’ என்கிற தகவலைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். (பொயட்டுகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது!). பாடியவர் சித்தார்த்தாம்.
“ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதான்ற நம்பிக்கையிலதான் உள்ளே வரோம். அந்த நம்பிக்கை வீண் போகாது. எனக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. உங்களுக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று எல்லோரையும் ராஜூ வாழ்த்த, தனக்கு கிடைத்த லுங்கிகளில் ஒன்றை ராஜூவிற்கு பரிசாக தந்து ஸ்கோர் செய்தார் அர்னவ். “எல்லோரும் தரலாம் வாங்க’ என்று அவர் கூப்பிட யாரும் வரவில்லை.
பவித்ராவின் நியாயமான கோபம்
‘வெளில புரொடியூசர்ஸ் காத்திட்டிருக்காங்க. கதை சொல்லணுமாம்” என்கிற காரணத்தைச் சொல்லி பிரியத்துடன் ராஜூவை அனுப்பி விடை தந்தார் பிக் பாஸ். (வெளியே போ- ன்றதை இப்படியும் சொல்லலாம் போல!). முன்னாள் சீசன் டைட்டில் வின்னர் என்பதால் மிதமான பாசத்தைப் பொழிந்தார்.
மக்களுக்கு திடீரென்று ஞானோதயம் வர “இது வீடு இல்ல. மனிதர்களைச் செதுக்கும் பயிற்சிப் பட்டறை” என்று காமிரா முன்பாக கோரஸாக வந்து நெகிழ்ந்தார்கள்.
“என்னடி.. நீ.. வீட்லதான் எப்பவும் வேலை செய்வேன்னு பார்த்தா.. இங்கயும் வந்து அதையே பண்ணிட்டு இருக்கே.. காமிரா கிராஸ் ஆகறப்பலாம் பெருக்கிட்டு இருக்கே.. பாத்திரம் விளக்கிட்டு இருக்கே.. “ என்று பவித்ராவின் வீட்டில் இருந்து வந்தவர்கள் கிண்டலாக கண்டித்தார்கள். அந்த அளவிற்கு வீட்டு வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார் பவித்ரா. OCD சவாலை எதிர்கொள்கிறவர்கள், தீவிரமான சுத்தத்தை எதிர்பார்ப்பதும் இயல்பே.
பிக் பாஸ் அனுப்பவிருக்கும் மதிய உணவை வைப்பதற்காக கிச்சன் இடத்தை சுத்தம் செய்து இடம் ஏற்பாடு செய்ய வேண்டும். பொங்கல் செய்த களைப்பில் பலர் வராமல் கரும்பு கடித்துக் கொண்டிருக்க பவித்ராவிற்கு கோபம் வந்தது. “நானேவா செய்ய முடியும்.. எல்லோருமே செய்யலாம் ஒண்ணும் தப்பில்லை” என்று அவர் பொதுவாக கடிந்து கொள்ள “என்ன பவித்ரா.. இப்பத்தானே வந்து உக்காந்தோம். கொஞ்சம் டைம் கொடு.. வந்துடறோம்” என்று ஜாக் உள்ளிட்டவர்கள் சமாதானம் சொன்னாலும் பவித்ராவால் உடன்பட முடியவில்லை.
பெரும்பாலான இல்லத்தரசிகள் எதிகொள்ளும் அதே பிரச்சினையைத்தான் பவித்ராவும் எதிர்கொள்கிறார். “வேலை செய்யறவனுக்கு வேலையைக் கொடு. வேலை செய்யாதவனுக்கு ஃபேனைப் போடு” என்று அரசாங்க அலுவலகம் தொடர்பாக ஒரு பழமொழியே இருக்கிறது. தங்களின் தினசரி கடமைக்காக இல்லத்தரசிகள் பம்பரம் மாதிரி சுற்றிக் கொண்டிருக்க, ஒரு துரும்பைக் கூட நகர்த்தாமல் இருக்கும் இதர உறுப்பினர்கள் எல்லா வீட்டிலும் இருப்பார்கள். குறிப்பாக கணவன்மார்கள். இருந்த இடத்திலேயே எல்லாம் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதிலும் செல்போனில் மூழ்கியிருக்கும் இளம்தலைமுறையை வேலை வாங்குவது கடுமையான சவால். அதற்கு நாமே செய்து விட்டுப் போய் விடலாம் என்று தோன்றி விடும்.
“இல்லம்மா. நீ பாட்டுக்கு ஆரம்பிச்சேன்னா.. நாலு பேர் தன்னால வந்து சேந்துக்குவாங்க” என்று முத்து சமாதானம் சொல்லிப் பார்த்தார். “அப்படில்லாம் யாரும் வர்றதில்ல. போய்யா யோவ்” என்கிற மாதிரி கோபம் குறையாமல் இருந்தார் பவித்ரா. “உன்னால முடிஞ்சத மட்டும் செய். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பாங்க” என்று பிறகு தர்ஷிகா சொல்ல “அதெல்லாம் சரி.. ஆனா யாருமே வேலை செய்ய வரமாட்றாங்க” என்று புலம்பினார் பவித்ரா. ‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே’ என்கிற கீதா மொழியை இப்போது யாராவது சொன்னால் கட்டையை எடுத்து அடித்து விடுவார் போலிருக்கிறது. அமைதியான பவித்ரா இப்போது அப்படியொரு கொலைவெறியில் இருக்கிறார். “இந்த சுத்தம்ன்ற விஷயத்துல அவளைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது” என்று முத்துவிடம் பிறகு ஆனந்தி சொல்லிக் கொண்டிருந்தார்.
வீட்டிற்குள் வந்த விருந்தினர் - அட! நம்ம லோஸ்லியா.. !
அனைவரும் சாப்பிட உட்காரும் நேரம் பார்த்துதானா பாடல் ஒலிக்க வேண்டும்?! பாவம். ‘சாப்பிடும் போது கடவுளே வந்தாலும் எழுந்திருக்கத் தேவையில்லை’ என்கிற பொன்மொழியை உருவாக்கியவன் நிச்சயம் என்னைப் போல் பசியறிந்தவன். அனைவரும் எழுந்து வாசலுக்கு ஓட, ரவீந்தர் மட்டும் நகராமல் “நீ ரசத்தை ஊத்து’ என்று அப்பளத்தைக் கடித்துக் கொண்டிருந்தார். (என் இனமய்யா நீங்கள்!).
உள்ளே வந்தவர்.. அட! நம்ம லோஸ்லியா. ‘சின்ன வயசுல மூக்கு ஒழுகிட்டு கருகருன்னு இருந்தா.. ஆனா இப்ப பாலிஷ் போட்ட மாதிரி மாறிட்டா’ என்று முத்தழகு குறித்து பருத்திவீரன் சொல்வது மாதிரி கூடுதல் அழகாக இருந்தார். மன்னிக்கவும் ‘வடிவாக’ இருந்தார். ஆனால் - பிக் பாஸ் அழைத்தவுடன் ‘யம்மா’ என்று தன்னிச்சையாக அலறும் பழைய வெள்ளந்தியான லோஸ்லியாவை இப்போது பார்க்க முடியவில்லை. அந்தப் பெண் காணாமல் போய் அளவான புன்னகையுடன் மிதமாகப் பேசும் லோஸ்லியாவைத்தான் பார்க்க முடிந்தது. (சினிமா எல்லோரையும் மாற்றி விடும் போலிருக்கிறது). காஸ்மெட்டிக் ஒப்பனையில் சினிமா ஹீரோயின் லுக் வந்திருந்தது.
கூட வந்தவர் ஹரி பாஸ்கர். நம்ம ஊர் இளைஞன் டைப்பில் இயல்பான தோற்றத்துடன் இருந்தார். ‘ஹவுஸ்கீப்பிங்’ என்கிற படத்தின் பிரமோஷனுக்காக இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். இதில் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் ரயானும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
‘உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் பிக் பாஸ்’ என்று நளினமான வணக்கத்துடன் சொன்னார் லோஸ்லியா. அனைவரும் இவர்களை ஸ்பெஷலாக வரவேற்றார்கள். ‘ஒரு நாளைக்கு நானும் இப்படி வருவேன்’ என்கிற கனவு சவுந்தர்யாவின் கண்ணில் தெரிந்தது போல் இருந்தது. நாம் வீட்டில் சாப்பிட உட்காரும் போது திடீர் விருந்தினர்கள் வந்து விட்டால் வேறு வழியில்லாமல் அவர்களுக்கும் பகிர்ந்து தொலைவோம் அல்லவா? அப்படியே வந்தவர்களுக்கு தங்கள் பங்கிலிருந்து உணவை அன்புடன் வழங்கினார்கள். ராஜூவிடம் கூட அதிகம் பேசாத பிக் பாஸ், இப்போது லோஸ்லியாவை சாப்பிட விடாமல் “ஏதாவது பேசும்மா.. ஏதாவது பேசம்மா” என்று இம்சித்துக் கொண்டிருந்தார். (யோவ் மிலிட்டரி.. நீ எங்கயா இங்க?!).
ஹரி பாஸ்கர், லோஸ்லியா, ரயான் நடித்த ‘ஹவுஸ்கீப்பிங்’ படம் காமெடி ஜானராம். டீசரைப் பார்த்தால் கொஞ்சம் அடல்ட் ஏரியாவிற்குள் சென்றது. சுவாரசியமான கன்டென்ட் ஆகத்தான் இருக்கும் போல. ஆனால் அட்டையைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிட முடியாது என்பது டீசர்களுக்கும் பொருந்தும். “ஏம்ப்பா.. ரயானு.. உங் கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று ஸ்டார் ஆகி விட்ட ரயானை ஜாக்குலினும் சவுந்தர்யாவும் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஓடிச் சென்று திரவியம் தேடு
அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் ஆரம்பித்தது. (பொட்டி வந்துடுச்சேய்!) ஆனால் இத்தனை சீசன்களாக இருந்த விஷயங்கள் இதில் இல்லை. பல திடுக்கிடும் டிவிஸ்ட்டுகள் இருந்தன. பணப்பெட்டியை எடுத்தாலும் ஆட்டத்தை தொடரலாம். ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்க முயலலலாம். ஆனால் இதில் ஆபத்தான விதிகள் இருந்தன. குறிப்பிட்ட தூரத்திற்குள் இருக்கும் பெட்டியை குறிப்பிட்ட விநாடிகளுக்குள் எடுத்துக் கொண்டு மெயின் டோருக்குள் வந்து விட முடியும். தாமதம் ஆனால் பெட்டியை கீழே வைத்து விட்டு அப்படியே ஆட்டோ ஏறி வீட்டுக்கு போக வேண்டியதுதான். ஆட்டத்திலிருந்து அவுட். ஆட்டோவிற்கு காசு கொடுப்பதற்கு கூட பெட்டியைத் தொடக்கூடாது.
ஆனால் பிக் பாஸ் உஷார்தான். பல பெட்டிகள் இருக்கு’ என்று ஆசை காட்டினாலும் அது டைட்டில் பிரைஸ் மணியில் இருந்து கழிக்கப்படுமாம். ‘அய்யோ.. ரொம்ப ரிஸ்கா இருக்கு’ என்று பயந்தார் பவித்ரா. ‘நான் ரிஸ்க் எடுக்கப் போறதில்ல’ என்று பின்வாங்கினார் ஜாக். ‘இது do or die situation. வந்தா மலை.. போனா மண்ணு’ என்று துணிந்தவர் முத்து. போட்டியாக நின்றவர் ரயான்.
முதல் வாய்ப்பு முத்துவிற்கு கிடைத்தது. அவர்தான் முதலில் தன் பெயரை அறிவித்தார். பின்னால் வந்து தோற்றவர் ரயான். 30 மீட்டர் தூரத்தில் இருக்கும் பெட்டியை 15 நொடிகளுக்குள் எடுக்க வேண்டும். ஒருவேளை தோற்று விட்டால்?... அவ்வளவுதான். நூறு நாள் உழைப்பையும் 15 நொடிகளில் இழக்க வேண்டியிருக்கும். முத்து இந்த ரிஸ்க்கை எடுக்கத் துணிந்தது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். 30 மீட்டரை 15 நொடிகளுக்குள் கடப்பது மட்டுமே விஷயமல்ல. பதட்டமில்லாமல் செய்ய வேண்டும். கால் தடுக்கி விழுந்தால் அவ்வளவுதான். ‘வரும் போது பொட்டியை தூக்கிட்டு வரணும்.. பார்த்துக்கோ’ என்று முன்கூட்டியே எச்சரித்தார் ரயான்.
‘ஒருவேளை மனசு மாறினா வீட்டுக்குள் திரும்பிடுங்க.. ரெடியா?” என்று முதல் போட்டியை ஆரம்பித்தார் பிக் பாஸ். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு தயாரானார். அதற்குள் உசைன் போல்ட் ஓடிய கணக்கையெல்லாம் வீட்டுக்குள் போட்டு வைத்திருந்தார்கள். பஸ்ஸர் அடித்ததும் வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல பாய்ந்தார் முத்து. நாய் துரத்தியது போல் ஓடினார் என்றும் சொல்லலாம். “முத்து வந்துடுடா… ப்ளீஸ்..’ என்று எல்லோரும் பத்ட்டமாக பார்த்துக் கொண்டிருக்க 12 நொடிகளில் வீட்டுக்குள் வந்து அனைவருக்கும் நிம்மதி தந்தார் முத்து. ‘டைட்டில் ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளவர்’ என்று கருதப்படும் முத்து, இந்த ரிஸ்க்கை எடுத்ததில் சக போட்டியாளர்களே மிரண்டிருப்பார்கள்.
நம்ப முடியாத ரிஸ்க்கை எடுத்த முத்து
“எனக்காக எல்லோருமே பதட்டப்பட்டீங்க. அந்த அன்பிற்காக நன்றி” என்று பெருமூச்சு விட்ட முத்து, எடுத்து வந்த பணப்பெட்டியை தீபக்கிற்கு சமர்ப்பணம் செய்தது சிறப்பு. ‘ஒருத்தன் வெளில காலடி வெச்சிட்டு உள்ளே வர்றது இந்த சீசன்லதான்’ என்று வியந்தார் ரயான்.
முத்து ஓடிய வேகத்தைப் பார்த்து ஜாக்கிற்கு கலக்கம் வந்திருக்கும். “எனக்கும் காசு தேவைதான். ஆனா இப்படி ஓட முடியுமான்னு தெரியலையே”என்று கலங்கியது இயல்பு. ஆனால் சாதிக்க முடிந்த எதையும் பெண்ணாலும் சாதிக்க முடியும். இதில் பாலின பேதம் பார்க்கத் தேவையில்லை என்றாலும் ஆணின் உடற்கூறுக்குரிய வலிமையை பெண்ணால் சமன் செய்ய முடியுமா என்கிற கேள்வி யதார்த்தமானது. இப்படியொரு போட்டியை வைத்த பிக் பாஸ் விதி என்பது அநீதியாகத் தெரிகிறது.
ஸ்டோர் ரூம் பெல் அடிக்க ‘ஸ்வீட் ஸ்டாலுக்கு’ முன்பாக வந்து சேர்ந்தார் அன்ஷிதா. அவருடைய பெயரைக் கேட்டதும் அர்னவ்வின் முகம் மாறியதோ? அனைவருமே அன்ஷிதாவின் வருகைக்கு சந்தோஷப்பட்டார்கள். விஷால் அண்ணாச்சி கூடுதல் ஹாப்பி. “நான் வன்மத்தைக் கொட்ட வரலை. இருக்கற நாள்ல ஹாப்பியா இருங்க” என்று பாசிட்டிவ்வாக பேசினாலும் சில விவகாரங்களை அன்ஷிதா சொல்லத் தவறவில்லை.
விஷால் குறித்த கமெண்ட்டிற்காக சாச்சனாவிற்கு அட்வைஸ் செய்த அன்ஷிதா, ‘இந்த வீட்டில் பொிய அரவணைப்பு தேவைப்படுபவர் சவுந்தர்யா’ என்று சொல்லி அவரை இறுக்கி அணைச்சு உம்மா தந்தார். பிரமோஷன் என்கிற பெயரில் சவுந்தர்யாவை டார்கெட் செய்து எல்லோரும் அடிப்பதால் ஏற்பட்ட சிம்பதியாக இருக்கும். “உனக்கு வெளியதான் பிஆர் இருக்கு. ஆனா முத்துவிற்கு வீட்டுக்குள்ளயே இருக்கு” என்று ரவியை மறைமுகமாக தாக்கினார் அன்ஷிதா. பிறகு விஷாலைப் பார்த்து ‘ஒண்ணுமேயில்ல. பார்த்துக்கலாம்’ என்று ஆதரவு காட்டினார்.
அன்ஷிதா பற்ற வைத்தது கொஞ்சம் பற்றிக் கொண்டது. “ரவிண்ணே.. உபகாரம் பண்றேன்னு உபத்திரவம் பண்ணாதே.. இனிமே எனக்காக பேசாத. ப்ளீஸ்” என்று ரவியிடம் முத்து கெஞ்ச வேண்டியிருந்தது. “எனக்குத் தோண்றதை நான் சொல்லித்தானே ஆகணும்” என்று அப்போதும் மல்லு கட்டினார் ரவி. “பி.ஆர். மட்டுமே ஒண்ணும் செய்ய முடியாது. கடைசியா மக்கள்தான்’ என்பதை மட்டும் அடிக்கடி சொல்லி விடுகிறார்கள்.
சவுந்தர்யாவிற்கு ஆதரவு தந்த அன்ஷிதா
அன்ஷிதா சவுந்தர்யாவிற்கு சப்போர்ட் செய்ததில் சுனிதாவிற்கு ஆட்சேபம். “யார் வேணா பி.ஆர் வெச்சுக்கட்டும். ஆனா manipulation பண்றது தப்பு. அது மக்களுக்குத் தெரியணும்” என்று சுனிதா சொன்னது நியாயமாகத் தெரிந்தது. விஷாலும் அன்ஷிதாவும் தனிமையில் பேசினார்கள். “தர்ஷிகா கூட நடந்தது வேற. ஆனா அதே மாதிரி உன்னையும் சம்பந்தப்படுத்தி பேசினாங்க” என்று விஷால் வருத்தப்பட “நீ ஏன் விளக்கம் சொல்லி கஷ்ப்படற” என்று ஆறுதல் சொன்னார் அன்ஷிதா.
“நான் அப்பவே உன் கிட்ட பதமா சொன்னேன். கேட்டியா?” என்று தர்ஷிகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பவித்ரா. “இந்த லவ்லெ்லாம் வேணாம். ஆட்டத்துல ஃபோகஸ் பண்ணு” என்று சொன்ன அறிவுரைக் காட்சி “அப்ப அப்படித் தோணலையே.. இப்பத்தான் வருத்தப்படறேன். என்ன செய்யறது.. என் புத்திய…” என்று கீழே இருந்த செருப்பைத் தூக்கினார் தர்ஷிகா. காதல் கண்ணை மட்டுமல்ல, வெற்றியையும் மறைக்கும்.
பணப்பெட்டி டாஸ்க்கில் ரயான் ரூ.2 லட்சம் வென்றாராமே?! என்னவென்று பார்த்து விடுவோம்.