'ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய ED' - அதிர்ச்சியில் முன்னாள் அமை...
சென்னை: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை... வடமாநில இளைஞர் கைது
சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பொங்கல் பண்டிகை அன்று கோட்டூர்புரத்தில் உள்ள டீக்கடைக்கு நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது அந்த டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் திடீரென மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டிருக்கிறார். இதையடுத்து அந்த டீக்கடையிலிருந்தவர்கள் என்னவென்று மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாணவியும் அவருடன் வந்த நண்பரும் டீக்கடையில் வேலை செய்யும் இளைஞர், அத்துமீறி நடந்த தகவலைத் தெரிவித்தனர்.
அதனால் ஆத்திரமடைந்தவர்கள், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஐடி மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்த்தில் புகாரளித்தார். அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து மாணவி குற்றம் சாட்டிய இளைஞரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரின் பெயர் ஸ்ரீராம் (29) என்றும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.