காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!
'ரூ.100.92 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கிய ED' - அதிர்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கிறார். இந்த நிலையில் வைத்திலிங்கம் 2011- 2016 வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி நிறுவனம் கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பத்திருந்தனர். இந்நிலையில் அனுமதி கொடுப்பதற்காக வைத்திலிங்கம் அந்த நிறுவனத்திடமிருந்து ரூ. 27.90 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கத்தினர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வைத்திலிங்கம் தரப்பு, 2016 ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை பாரத் கோல் கெமிக்கல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் அவரது மகன்கள் பிரபு மற்றும் சண்முகபிரபு இயக்குனர்களாக இருக்கும் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பெயரில் கடனாக வாங்குவது போல் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், வங்கி கணக்கில் மூலம் வைத்திலிங்கம் லஞ்ச பெற்றதாக சொல்லப்பட்டது. அத்துடன் 2011ல் ரூ 32.47 கோடியாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது 1,057.85 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் இது குறித்த தகவலை ஆதாரங்களுடன் அமலாக்கதுறைக்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீடு, மகன் பிரபு வீடு, உறவினர்கள் வீடு என பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் அமலாக்கத்துறையினர் கட்டு கட்டாக ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக சொல்லப்பட்டது. அப்போது வைத்திலிங்கம், எந்த ஆவணங்களும் எங்களிடமிருந்து எடுத்து செல்லவில்லை என்றார். இந்த நிலையில் சென்னை மண்டல அமலாக்கத்துறை வைத்திலிங்கத்தின் ரூ. 100.92 கோடி மதிப்பிலான இரண்டு வகையான அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த அறிவிப்பால் வைத்திலிங்கம் தரப்பினர் அதிர்ச்சியடைந்திருக்கிறது.