Meta : 'கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு' - மார்க் கருத்துக்கு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட மெட்டா
இந்தியாவின் பொது தேர்தல் வெற்றி குறித்து தவறான கருத்து தெரிவித்த மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சார்பாக மெட்டா நிறுவனம் தற்பொழுது மன்னிப்பு கோரி உள்ளது. கடந்த ஜனவரி 10ஆம் தேதி பாட்காஸ்ட் (Podcast) நிகழ்ச்சியில் பேசிய மெட்டா நிறுவன தலைமை நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், “2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தேர்தலை சந்தித்தன. ஆனால் 2024 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த கட்சிகள் கோவிட் தொற்றை கையாண்ட விதம், பணவீக்கம், பொருளாதாரப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக ஆட்சியை பறிகொடுத்து விட்டன” என்று கூறி இருந்தார். ஆனால் இந்தியாவில் எந்தவித ஆட்சி மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று மார்க் ஜூக்கர்பெர்க் கூறியதன் காரணமாக இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிலை குழு தலைவர் மற்றும் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் தள பதிவில், “ஒரு ஜனநாயக நாட்டின் மீதான தவறான தகவல் என்பது அந்த நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இந்த தவறுக்காக அந்த நிறுவனம் இந்திய நாடாளுமன்றத் திடமும், இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.
இந்த சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தேர்தலில் 64 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் மீண்டும் தங்களது நம்பிக்கையை உறுதிப்படுத்தினர். கோவிட்டிற்கு பிறகு, நடந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட அனைத்து அரசுகளும் தோல்வி அடைந்து விட்டன என்ற கருத்து முற்றிலும் தவறானது. 80 கோடி பேருக்கு இலவச உணவு, 220 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி, கோவிட் காலத்தில் மற்ற நாடுகளுக்கு உதவி என இந்தியா சிறப்பாக செயல்பட்டு முன்னிலையில் இருந்தது. பிரதமர் மோடியின் 3.0 ஆட்சி வெற்றி என்பது அவருடைய சிறந்த நிர்வாகத்தையும், பொதுமக்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகின்றது. மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களிடம் இருந்து வந்த தகவலை பார்க்கும் பொழுது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மையையும், நம்பகத்தன்மையையும் நிலை நிறுத்துவோம்” என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மன்னிப்பு கோரி மெட்டா நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ரல் வெளியிட்ட அறிக்கையில், “ மரியாதைக்குரிய அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, 2024 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த அதே கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்ற மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களின் கருத்தானது பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவிற்கு இது பொருந்தாது. மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா ஒரு முக்கியமான நாடு. இந்த கவனக்குறைவால் ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தியா புதிய எதிர்காலத்தின் மையத்தில் இருப்பதை நாங்கள் உணர்கிறோம்” என்று அவர் மன்னிப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிலை குழு தலைவர் நிஷிகாந்த் துபே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய ஒரே நாளில் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.