ராமேசுவரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு வசதிகள் தொடக்கம்
ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய பாம்பன் பால கட்டுமானப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதே போல, ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் மறுசீரமைப்பணிகள் நடைபெற்றன. இதனால், மண்டபம் ரயில் நிலையத்துடன் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில்சில ரயில்களின் பெட்டிகளை, மதுரையில் பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக திங்கள், வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் மண்டபம்- மதுரை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது ராமேசுவரம் ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் பெட்டிகளை பராமரிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருப்பதி, கன்னியாகுமரி ரயில்களின் பெட்டிகளுக்கான பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன. 17) முதல் மதுரைக்குப் பதிலாக ராமேசுவரத்திலேயே நடைபெற உள்ளன.
எனவே, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட்ட மண்டபம்- மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டது.