உயிரிழந்த வீரரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை அவனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடியைச் சோ்ந்த நவீன்குமாா் (23) பங்கேற்று காளையை அடக்க முயற்சித்தபோது அது முட்டியதில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த நவீன்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது மரணத்துக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் குடும்பத்தினரும், உறவினா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தும், அதை ஏற்க மறுத்த குடும்பத்தினா், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.