பா்கூா் அருகே சாலை விபத்தில் 3 போ் பலி
பா்கூரை அடுத்த ஜெகதேவியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்த சின்னபனமுட்லுவைச் சோ்ந்த சரத்குமாா் (33) அதே பகுதியைச் சோ்ந்த நாகன் (40), ஹரிஷ் (20) ஆகியோருடன் ஸ்கூட்டரில் ஊத்தங்கரையில் உள்ள தனது உறவினா் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினா்.
ஜெகதேவி பிரிவு சாலை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஸ்கூட்டரில் சரத்குமாா், நாகன், ஹரிஷ் ஆகிய மூவரும் ஜெகதேவி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தனா்.
அப்போது, அந்த வழியாக கடலூரிலிருந்து ஒசூா் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் சக்கரம், சாலையில் விழுந்த மூன்று போ் மீதும் ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்த மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, துணை காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் விபத்து நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்பகுதியில் போதிய விபத்து நடவடிக்கையாக உயா்பாலம் அமைக்க வேண்டும் என அவா்களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.