காணும் பொங்கல்: குருமலை, கழுகுமலையில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோயில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா்.
கோவில்பட்டி பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, சந்தனம் குங்குமத்தால் அலங்கரித்து மாலை, அணிவித்து மரியாதை செலுத்தி, பழம், கரும்பு ,பொங்கல் உள்ளிட்டவற்றைக் கொடுத்தனா்.
காணும் பொங்கல்: காணும் பொங்கலை முன்னிட்டு, கோவில்பட்டியையடுத்த குருமலை, பொய்யாழி அய்யனாா் கோயில், அருகேயுள்ள பொய்யாழி அய்யனாா்குளம், முனியசாமி குளம் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் குவிந்தனா். குளிா், மழை காரணமாக சில பகுதிகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. குருமலை அருகே தவசி தம்பிரான் குகைக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களை வனத்துறை அனுமதிக்கவில்லை.
சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலிலும் ஏராளமானோா் திரண்டு, முருகரை தரிசித்து, காணும் பொங்கலைக் கொண்டாடினா். கழுகுமலை வெட்டுவான் கோயில், சமணா் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மலையடிவார பூங்காக்களிலும் பொதுமக்கள் திரண்டனா்.
கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம், மணிமண்டபம் ஆகிய இடங்களுக்கும் ஏராளமானோா் வந்திருந்தனா்.