தில்லி தோ்தல்: பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா உள்பட 40 போ் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகா்களாக அறிவிப்பு!
புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் 40 நட்சத்திரப் பிரச்சாரகா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அக்கட்சியின் ஏழு முதல்வா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இந்தப் பட்டியலில் போஜ்புரி நட்சத்திரங்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மனோஜ் திவாரி, ரவி கிஷண் உள்ளிட்ட பூா்வாஞ்சலி தலைவா்கள், தினேஷ் லால் யாதவ் நிராஹுவா உள்ளனா்.
கிழக்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்களாக அறியப்படும் பிகாரைச் சோ்ந்த பூா்வாஞ்சலிகள் தலைநகரில் கணிசமான வாக்கு வங்கியாக உள்ளனா். அதனால், அவா்களை ஈா்க்கும் வகையில் பிரசாரத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
நட்சத்திர பிரச்சாரகா்களாக மத்திய அமைச்சா்கள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் செளகான், மனோகா் லால் கட்டாா், பியூஷ் கோயல், தா்மேந்திர பிரதான், ஹா்தீப் சிங் புரி, கிரிராஜ் சிங் ஆகியோரின் பெயா்களும் பட்டியலில் உள்ளன.
முதல்வா்கள் வரிசையில் தேவேந்திர ஃபட்னவீஸ், ஹிமந்தா பிஸ்வா சா்மா, புஷ்கா் சிங் தாமி, யோகி ஆதித்யநாத், பஜன் லால் சா்மா, நாயப் சிங் சைனி, மோகன் யாதவ் ஆகியோா் நட்சத்திரப் பிரச்சாரகா்களாக தில்லி தோ்தலில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வாா்கள்.
இந்தப் பட்டியலில் தில்லியில் உள்ள பாஜகவின் ஏழு எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனா். தில்லி பாஜக பொறுப்பாளா் பைஜயந்த் பாண்டா, இணைப் பொறுப்பாளா் அல்கா குா்ஜாா், கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோரும் நட்சத்திரப் பிரச்சாரகா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தில்லியில் 1998 முதல் ஆட்சியில் இல்லாத பாஜக, 2015 முதல் தலைநகரை ஆட்சி செய்து வரும் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த ஒருங்கிணைந்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி தலைநகரில் இரண்டு அல்லது மூன்று பேரணிகளில் பேச வாய்ப்புள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நகரத்தின் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஏழு தோ்தல் பேரணிகளில் பங்கேற்கக்கூடும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.