திருப்பத்தூர்: தி.மலை நெடுஞ்சாலையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம், வெங்கலாபுரம் அருகே உள்ள திருவண்ணாமலை நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கிறது இந்த இடம். செங்கம், சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையில் சில மாதங்களாகக் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு நிலவிக் காணப்படுவதோடு துர்நாற்றமும் வீசுகிறது.இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, ``கடந்த சில மாதங்களாகத் தான் இது இப்படி இருக்கிறது. இரவு நேரங்களில் எங்கு இருந்தோ வருகிறார்கள், குப்பைகளை மூட்டை கட்டி வீசிச் செல்கிறார்கள். ஏதாவது கேட்டால் எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள்.
இதனால் எங்களுக்குத்தான் துர்நாற்றமும் நோய்த்தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.இவ்விடத்தில் ஒரு நிமிடத்தில் பல வாகனங்கள் கடந்து செல்கின்றன. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகளை முகம்சுளிக்க வைப்பதோடு சிலர் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.இந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் தான் எங்கள் வீடுகளும் கடைகளும் உள்ளது. இங்குப் பிழைப்பு நடத்துவதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் தவிர்த்து, மக்காத பிளாஸ்டிக் பொருள்கள், கோழிக் கழிவுகள் எனப் பல்வேறு வகையான கழிவுகளை இங்கே தூக்கி வீசிச் செல்கின்றனர். இந்தக் குப்பை கொட்டுகின்ற இடத்திற்கு அருகில், ஏரிக்குத் தண்ணீர் செல்வதற்குக் கால்வாய் இருப்பதால், இந்த குப்பைகளால் ஏரி தண்ணீர் மாசடையும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த இடத்தை அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும்தான் பார்வையிடுகிறார்கள். அதிகாரிகள் இவ்விடத்தை அடிக்கடி கண்காணித்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற சூழல் உருவாகியிருக்காது என்றனர்.
இது தொடர்பாக அந்தப் பகுதி மக்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் பேசியும், நேரடியாக விசிட் செய்தும் இந்த நெடுஞ்சாலையின் அவலநிலை குறித்து விகடன் தளத்தில் `திருப்பத்தூர்: குவியும் குப்பையால் முகம் சுளிக்கும் வாகன ஓட்டிகள்... தி.மலை நெடுஞ்சாலை அவலம்!' என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை ஜனவரி 3-ம் தேதி வெளியிட்டிருந்தோம்.
மேலும் இந்த விவகாரத்தை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக, அதிகாரிகள் விரைந்து குப்பைகளை அப்புறப்படுத்தியுள்ளார்கள்.