Doctor Vikatan: 'காதலிக்க நேரமில்லை' பட ஸ்டைலில் விந்தணு தானம்: நிஜத்தில் எப்படி நடக்கும்?
Doctor Vikatan: சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் 'காதலிக்க நேரமில்லை' படம் பார்த்தேன். படத்தில் நடிகர் வினய், விந்தணு தானம் கொடுக்க மருத்துவமனைக்குச் செல்வார். கூடவே தன் நண்பர் ஜெயம் ரவியையும் அழைத்துச் செல்வார். திடீரென ஜெயம் ரவியையும் விந்தணு தானம் செய்யச் சொல்வார் வினய். ஜெயம் ரவியும் சம்மதிக்க, மருத்துவமனையில் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லிவிட்டு, கையில் கன்டெய்னரை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். இருவரும் விந்தணுக்களைச் சேகரித்த கன்டெய்னரை ஒப்படைத்துவிட்டு வெளியே வருவார்கள். விந்தணு தானம் என்பது இவ்வளவு எளிமையான விஷயமா... தானம் கொடுப்பவரின் உடல்நலம், பின்னணியெல்லாம் ஆராயப்படாதா? நிஜத்திலும் இப்படித்தான் விந்தணு தானம் பெறப்படுகிறதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
ஐசிஎம்ஆர் எனப்படும் இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சின் கைடுலைன்ஸின்படியே இந்தியாவில் ஒருவர் விந்தணு தானம் செய்ய முடியும். உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் ஒழுங்குமுறை சட்டம், 2021 (The Assisted Reproductive Technology (Regulation) Act, 2021) என்பது இந்தியாவில் உள்ள ஒரு சட்டம். இது உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ART) சேவைகள் மற்றும் கிளினிக்குகளின் நடைமுறையை நிர்வகித்து மேற்பார்வை செய்கிறது.
21 முதல் 45 வரையிலான ஆண்கள் விந்தணு தானம் செய்யத் தகுதியானவர்கள். விந்தணு தானம் செய்ய முன்வரும் நபர்களுக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அவர்களுக்கு பரம்பரையாகத் தொடரும் நோய்கள் இருக்கக்கூடாது. அந்த நபர், நல்ல உடல்நிலையிலும் மனநிலையிலும் இருக்க வேண்டும். அதற்கு உளவியல் நிபுணர்கள் சான்றளிக்க வேண்டும். அந்த நபருக்கு ஹெச்ஐவி, சிபிலஸ், ஹெப்படைட்டிஸ் உள்ளிட்ட தொற்றுநோய்கள் இருக்கக்கூடாது.
அந்த நபரின் விந்தணுக்களின் தரம் சரிபார்க்கப்படும். விந்தணுக்களின் நகரும் தன்மை, எண்ணிக்கை, உருவ அமைப்பு போன்றவை சரிபார்க்கப்படும். விந்தணு தானம் செய்பவர் யாருக்கு தானம் செய்கிறார் என்ற விவரம் வெளியில் தெரிவிக்கப்படாது. அவரது விந்தணு தானம் பெற்றுப் பிறக்கும் குழந்தையுடன் அவருக்கு சட்டரீதியான எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு விந்தணு தானம் செய்ய முடியாது.
விந்தணுக்களை வணிக ரீதியில் விற்கவோ, காசு பெற்றுக்கொண்டு தானம் செய்யவோ முடியாது. தானம் செய்ய முன்வரும் நபரிடம் எழுத்துபூர்வமாக அதற்கான சம்மதம் பெறப்பட வேண்டும். உரிமம் பெற்ற The Assisted Reproductive Technology வங்கிகளில் மட்டும்தான் விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும். பெரும்பாலான விந்தணு வங்கிகள், 2 முதல் 7 நாள்கள் வரை தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என தானம் செய்வோருக்கு அறிவுறுத்தும். விந்தணு தானம் செய்பவர், புகைப்பழக்கம், குடிப்பழக்கம், போதைப்பழக்கம் போன்றவை இல்லாதவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவரின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.