சிறுத்தை தாக்கியதில் 8 வயது சிறுமி பலி!
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில் சிறுத்தை தாக்குதலில் 8 வயது சிறுமி பலியானார்.
அம்மாவாட்டத்தின் கட்டார்னியாகாட் வனப்பகுதியின் அருகிலுள்ள தமோலின்புர்வா எனும் கிராமத்தைச் சேர்நத சாலினி (வயது8) எனும் சிறுமி அவரது பெற்றோருடன் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று அந்த சிறுமியை தாக்கி இழுத்துக்கொண்டு சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த கிராமத்துவாசிகள் தங்களது கையிலிருந்த ஆயுதங்களை வைத்து சிறுத்தையை விரட்டியுள்ளனர். இருப்பினும், அந்த சிறுத்தை கடித்து தாக்கியதில் படுகாயமடைந்த சிறுமி பரிதாபமாக பலியானார்.
இதையும் படிக்க: ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது!
இந்த சம்பவம் அறிந்து, அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த சிறுமியின் உடலை கூராய்வு சோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்து கண்கானித்து வருகின்றனர்.
மேலும், வனத்துறையினர் சார்பில் அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.10,000 உதவிப்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், வயலில் வேலை செய்யும் மக்கள் கூட்டமாகவும் தற்காப்புடனும் வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 1 ஆண்டு காலத்திற்குள் கட்டார்னியாகாட் வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தம் 7 முறை சிறுத்தை தாக்குதல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.