கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்!
கரூர் ஆர்.டி.மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ராச்சாண்டார் திருமலையில் இன்று ஜல்லிக்கட்டு தொடங்கியது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வியாழக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை எனப்படும் ராச்சாண்டார் திருமலை கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டு போட்டிக்கான ஏற்பாடுகள் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்பொழுது போட்டி ஏற்பாடு செய்தவர்களிடம் மது போதையில் யாரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்க கூடாது, போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மது மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுடன் போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை 8:30 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் வி.தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரஸ்கோன் அப்துல்லா ஆகியோர் வருகை தந்தனர்.
தொடர்ந்து காலை 8.30 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் காலையாக கரையோரான் கோயில் காளை வாடிவாசல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டது.
அந்தக் காலை யாருக்கும் பிடிபடாமல் போக்கு காட்டி ஓடியது. தொடர்ந்து காளைகள் திறந்துவிடப்பட்டன. போட்டியில் மொத்தம் 750 காளைகளும், 280 காளையர்களும் களம் இறக்கப்பட்டனர்.
தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், விடாமல் சென்ற காளைகளுக்கும் அவ்வப்போது சைக்கிள், அண்டா போன்ற பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் சிறந்த காளைகளுக்கு, அதிககாளைகளை அடக்கும் வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.