கேரளா: `நிறமில்லை, ஆங்கிலப் புலமையில்லை...' - கணவர் வீட்டாரின் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை
கேரளாவில், 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவரின் நிறம் மற்றும் ஆங்கிலப் புலமையின்மையால் கணவர் வீட்டார் வீட்டாரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டதாகப் பெண் வீட்டார் புகாரளித்திருக்கின்றனர்.
போலீசாரின் கூற்றுப்படி, உயிரிழந்த பெண்ணின் பெயர் ஷஹானா மும்தாஜ் (19). அவருடைய கணவரின் பெயர் அப்துல் வஹாப். அபுதாபியைச் சேர்ந்த அப்துல் வஹாபுக்கும், ஷஹானாவுக்கும் கடந்த ஆண்டு மாதம் திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்துக்குப் பின்னர், அப்துல் வஹாப் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்வதற்கு முன்பாக கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருந்தனர்.
இந்த நிலையில்தான், ஷஹானா ஜனவரி 14-ம் தேதியன்று காலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். அதைத்தொடர்ந்து, கொண்டோட்டி பகுதி போலீஸார் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 194-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர்.
இதில், அப்துல் வஹாப் குடும்பத்தினரைக் குற்றம்சாட்டிய உயிரிழந்த பெண்ணின் உறவினர் அப்துல் சலாம், ``அப்துல் வஹாப் தொடர்ச்சியாக ஷஹானாவின் அழைப்புகளைப் புறக்கணித்தார். மேலும், மெசேஜ்களில் அவரின் தோற்றம் மற்றும் ஆங்கிலப் புலமையின்மையைச் சுட்டிக்காட்டித் துன்புறுத்தினார். இதனால், ஷஹானா தனது மாமியாரிடம் இதைப்பற்றிக் கூறியபோது, தனது மகன் நல்ல நிறமுள்ள மற்றும் மெச்சூரிட்டியான வாழ்க்கைத் துணைக்குத் தகுதியானவர் என்று அவர் மேலும் துன்புறுத்தலுக்குள்ளாக்கினார்." என்று கூறினார். இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று நிலையில், போலீஸ் தரப்பிலிருந்து இதுவரை பெண் வீட்டாரின் குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...