BB TAMIL 8 DAY 101 : நெருங்கும் விஷால், அன்ஷிதா; தயங்கி நிற்கும் ஜாக்குலின்; தவிக்கும் பவித்ரா
பணப்பெட்டி டாஸ்க்கிற்காக ரயான் மின்னல் வேகத்தில் ஓடியதைத் தவிர இந்த எபிசோடில் பரபரப்பாக வேறொன்றுமே நிகழவில்லை. இறுதிக்கட்டத்தில் இப்படியொரு அசுவாரசியம். மாகாபா ஆனந்தின் என்ட்ரி மட்டுமே சற்றாவது சுவாரசியப்படுத்தியது. அதுவும் இல்லையென்றால் பூஜ்யம்தான்.
அது சரி, பெட்டி டாஸ்க்கில் ஜாக்குலின் தோற்று எவிக்ட் ஆகி விட்டாராமே?! உங்களுக்கு ஏதாவது சேதி தெரியுமா?
“நீ உள்ள வர்றதுக்கு முன்னாடி அன்ஷிதா வந்தா ஹாப்பின்னு சொன்னாங்க. அப்ப விஷாலுக்கும் ஹாப்பி’ன்னு இந்த அர்னவ் பய கமெண்ட் பண்றான். பயங்கர கோபமா வந்துச்சு.. ஏண்டா என் பெயரை இழுக்கறேன்னு கேட்டேன். அப்ப நம்ம சத்யாதான் வந்து ‘அவன் கெடக்கறான்.. நீ வா மச்சான்னு இழுத்துட்டுப் போனான்” - இப்படியாக அன்ஷிதாவிடம் நடந்த சம்பவத்தை விவரித்துக் கொண்டிருந்தார் விஷால். இதை ரசித்து சிரித்துக் கேட்டார் அன்ஷிதா.
ஆரம்பக்கட்டத்தில் அர்னவ்வும் அன்ஷிதாவும் நண்பர்களாக வீட்டுக்குள் நுழைந்தார்கள். என்றாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை. அர்னவ் அன்ஷிதாவை நாமினேட் எல்லாம் செய்ததாக நினைவு. இப்படியெல்லாம் செய்து ‘நாங்கள் நேர்மையாக ஆடுகிறோம்’ என்று ஆடினாலும் வெளியுலக விவகாரங்களை அறிந்தவர்கள் குறுகுறுப்புடன்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் விரைவிலேயே அர்னவ் வெளியேறி விட சில நாட்களுக்கு அப்செட் ஆக இருந்தார் அன்ஷிதா. அவரும் கூட விரைவில் வெளியேறுவார் என்று தோன்றியது. ஆனால் எப்படியோ அன்ஷிதா தாக்குப் பிடித்து விட்டார். அந்த இடைவெளியில் தர்ஷிகா வெளியேறி விட விஷால் - அன்ஷிதா நட்பு இன்னமும் இறுக்கமாகி விட்டது. அதை வெளியில் இருந்து அர்னவ் பார்த்திருக்கலாம். அந்தக் காண்டில் அவர் இவர்களின் நட்பை மலினமாகப் பேச அர்னவ்விற்கு அன்ஷிதா ‘டூ’ விட்டிருக்கலாம். இது தற்காலிக பிரிவாக இருக்கலாம். எப்படியோ இப்போதைக்கு அர்னவ் மீது அன்ஷிதாவிற்கு வருத்தம் இருப்பதால் இடைவெளியைப் பின்பற்றுகிறார்.
நாள் 101. பெட்டி டாஸ்க்கை இரண்டு லட்சமாக உயர்த்தி ஆசை காட்டினார் பிக் பாஸ். 45 மீட்டரை 25 விநாடிகளில் கடந்து வர வேண்டும். திரும்பி வருவதையும் சேர்த்தால் 90 மீட்டர். கடந்த முறை வாய்ப்பை முத்துவிடம் தவற விட்ட ரயான், இந்த முறை அறிவிப்பு முடிவதற்குள்ளாகவே ‘பிரசன்ட் சார்’ என்று பெயர் கொடுத்து விட்டார்.
சவுந்தர்யா சான்ஸே இல்லை. இந்த மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ளவே மாட்டார். ஏனெனில் அவரது கொலைவெறி ரசிகர்கள் எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்கிற நம்பிக்கை. இவ்வளவு நாள் செய்தவர்கள் இந்தச் சமயத்தில் இன்னமும் உக்கிரமாக சப்போர்ட் செய்ய மாட்டார்களா என்ன? ஆனால் ஜாக்குலின், விஷால், பவித்ரா நிலைமை அப்படியில்லை. எதையாவது செய்து இறுதிக்கட்டத்தில் மக்களை கவர்ந்தாக வேண்டும்.
ஆனால் நீச்சல் குளத்தில் குதிப்பதா, வேண்டாமா என்று கரையில் கூட அல்ல, கரையில் இருந்து நூறு கிலோ மீ்ட்டர் தொலைவில் நின்று பாதுகாப்பாக யோசிக்கிறார்கள். ஜாக்குலினுக்கு தன் மீதே நம்பிக்கையில்லை. ஆனால் விஷாலும் பவித்ராவும் ‘ஒரு டிரை பண்ணி பார்க்கலாம்’ என்று மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால் வாய்ப்பு அது வரை காத்திருக்குமா, என்ன?
இறங்கலாமா வேண்டாமா என்று அமர்ந்திருந்த ஜாக்குலினிடம் “இனி மேல் போட்டி கஷ்டமா இருக்கும்” என்று சரியாக யூகித்துச் சொன்னார் சுனிதா. “எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு வர்ற மாதிரிதான் செட் பண்ணியிருப்பாங்க” என்று ஆறுதலாக சொன்னார் அன்ஷிதா.
அறிவிப்பு முடிவதற்குள்ளாகவே முந்திக் கொண்ட ரயான் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டார் விஷால். “அப்படின்னா.. நானும் பேச ஆரம்பிக்கறதுக்குள்ளயே போய் நின்னுட்டு, டாஸ்க் கஷ்டம்ன்னா திரும்பி வந்துடலாமா.. அது ஓகேவா?” என்பது மாதிரி புலம்பிக் கொண்டிருந்தார்.
‘ரெடியா ரயான். மனசு மாறினா திரும்பி வந்துடுங்க’ என்கிற அறிவிப்புடன் போட்டியை ஆரம்பித்தார் பிக் பாஸ். மெயின் கேட்டிற்கு வெளியே எப்படியிருக்கும் என்று இதுவரை நாம் அதிகம் பார்த்தது கிடையாது. செட்டிற்குள் வரவேண்டும் என்றாலே ஆட்டோ பிடிக்க வேண்டும் போலிருக்கிறது. பஸ்ஸர் அடித்ததும் தலைதெறிக்க ஓடினார் ரயான். முத்துவைப் போல பெட்டி எடுக்கும் போது கூட தடுமாறவில்லை. அதே வேகத்தில் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் திரும்பியதும் மற்றவர்கள் பெருமூச்சு விட்டார்கள். முத்துவிற்கு மட்டும் ‘வட போச்சே’ என்று மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம். 30 மீட்டர் ஓடியவனுக்கு 50000. 45 மீட்டர் ஓடியவனுக்கு நாலு மடங்கு அதிகமான பரிசுத் தொகை. என்னங்கய்யா இது என்று அவர் நினைத்திருக்கலாம்.
“நான் பத்திரமா திரும்பி வரணும்னு எல்லோருமே நெனச்சீங்க. அதுக்காக நன்றி” என்றார் ரயான். சுனிதா யூகித்தபடியே ‘இனி போட்டி கடினமாகும்’ என்று அறிவிப்பு செய்தார் பிக் பாஸ்.
விஷாலும் அன்ஷிதாவும் முன்பை விடவும் அதிகமான நெருக்கத்தைக் காட்டுகிறார்கள். அன்ஷிதாவிற்கு சாப்பாடு கொண்டு வருவதற்காக விஷால் செல்ல, “ஒரு அடிமை சிக்கிட்டான்’ என்கிற மாதிரி சந்தோஷப்பட்டார் அன்ஷிதா. பக்கத்தில் இருந்த சுனிதாவிற்கு பொறாமை இருந்ததோ, என்னவோ “இந்த மாதிரி care பண்ண ஒரு ஆள் இருக்கறது மகிழ்ச்சி. குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்று அதை சந்தோஷமாக மாற்றிச் சொல்ல, மேலும் வெட்கப்பட்டார் அன்ஷிதா. பிறகு உணவுத்தட்டை விஷால் சுமந்து வந்து ஊட்டி விட சாப்பிட்டார் அன்ஷிதா. (அது நட்பாகவே இருக்கட்டும். இந்த மாதிரி காட்சிகளை சமூகம் எப்படியாக பார்க்கும் என்பது கூடவா தெரியாது. அது இறுதிக்கட்ட வாய்ப்பை பாதிக்கலாம் என்று விஷால் யோசிக்கவில்லையா?!)
“ஜாக்கும் சவுண்டும் போக மாட்டாங்க. ஆனா பவி போறதுக்கு வாய்ப்பிருக்கு” என்று பெட்டி டாஸ்க் தொடர்பாக விஷால் யூகித்துக் கொண்டிருந்தார். “போட்டி இனிமே எளிதானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சுவாரசியமாக இருக்கும்” என்றார் பிக் பாஸ். “நெக்ஸ்ட்டு?” என்று போட்டியாளர்கள் கேட்க “ரெஸ்ட்டு’ என்கிற மாதிரி வீடியோ காண்பித்தார் பிக் பாஸ். இதுவரை டாஸ்க்குகளில் நடந்த காட்சிகளின் தொகுப்பு. கோட்டை கட்டும் டாஸ்க்கில் சவுந்தர்யா கற்களை காலால் உதைக்கும் காமெடிக் காட்சி வரும் என்று ஆவலாக எதிர்பார்த்தேன். வரவில்லை.
அடுத்ததாக ஒரு சலிப்பான டாஸ்க். டாப் 6 போட்டியாளர்களும் தங்களின் சக போட்டியாளர்களிடம் இருக்கும் நல்ல அம்சங்களைப் பற்றி சொல்ல வேண்டுமாம். ஒருவரைப் பற்றி பாசிட்டிவ்வாக பேசினால் அதிலென்ன சுவாரசியம்? அதிலும் பிக் பாஸ் வீட்டில் இந்த மாதிரியான அநியாயமெல்லாம் நடக்கலாமா? எனவே இந்த டாஸ்க் உப்புச் சப்பின்றி இருந்தது. ‘பவித்ராவை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது’ என்று வித்தியாசமாக ஆரம்பித்த ரயான், ‘இப்படி சைலண்ட்டாக இருந்து மேலே வரும் அணுகுமுறை ஆச்சரியமளிக்கிறது’ என்று குறிப்பிட்டார்.
வழக்கம் போல் முத்து பேசியது சுவாரசியம். அதிலும் பவித்ரா பற்றிய கமெண்டிற்கு (இவ வெளில போயிடுவான்னு சொன்னவங்க எல்லாம் வெளில போயிட்டாங்க!) பவித்ராவே வாய் விட்டு ரசித்து சிரித்தார். “இந்த சீசனில் எல்லோருமே வின்னர்தான்” என்று பரிசுப் பணத்தை ஆளாளுக்கு பிய்த்துக் கொண்டு போவதை முத்து சொன்னது பாராட்டா அல்லது ‘வட போவுதே’ மோமெண்ட்டா?
‘அண்ணனுக்கு ஜே’ என்கிற பாடல் ரகளையாக ஒலிக்க ‘என்னவோ… ஏதோ’வென்று மக்கள் வெளியே ஆவலாக ஓடி வந்தார்கள். வந்தவர் மாகாபா. ஒவ்வொரு சீசன் துவங்கும் போது இவரது பெயர் நிச்சயமாக அடிபடும். மேடைகளில் மாகாபா ரகளையாக கிண்டலடித்தாலும் இன்னொரு பக்கம் கோபக்காரராக இருக்கலாம். நகைச்சுவையுணர்வு உள்ளவர்களுக்கே இருக்கும் பொதுவான குணாதிசயம். மாகாபா கலந்து கொண்டிருந்தால் அவரது இன்னொரு பக்கத்தை பார்த்திருக்க முடியும்.
மாகாபா என்கிற பெயருக்கு ‘மற்றவர்களின் மண்டையைக் கழுவுபவர்’ என்கிற புதிய அர்த்தத்தை இந்த சீசன் தந்திருக்கிறது. சொன்னவர் தீபக் என்று நினைவு. எனவே அந்தப் பெயரிலேயே ஒரு நேர்காணல். இந்த டாஸ்க் ஒரளவு மட்டுமே சுவாரசியமாக இருந்தது. மாகாபா அடக்கியே வாசித்தார். கூடவே எலிமினேஷன் பயத்தையும் காட்டினார்கள்.
முதலில் அழைக்கப்பட்டவர் பவித்ரா. ‘டாப் 6 வந்ததை எப்படி உணர்கிறீர்கள்?’ என்கிற சம்பிரதாய கேள்விகள். “வீடே பத்தி எரிஞ்சாலும் சும்மா இருக்கிற பவித்ரா, துளி சாம்பார் ஊத்தினா டென்ஷன் ஆயிடறாங்களே, ஏன்?” என்று கேட்டு பவித்ராவை மட்டுமல்லாது வீட்டுக்குள் இருப்பவர்களையும் சிரிக்க வைத்தார். பவித்ராவின் ஓசிடி சவால் அப்படிப்பட்டது. “யார் கடுமையான போட்டியாளர்?” என்கிற கேள்விக்கு அனைவருமே’ என்று சேஃபாக பதில் அளித்தார் பவித்ரா.
அடுத்து கிளம்பிய விஷால் ‘எலிமினேட் ஆயிடுவனோன்னு பயமா இருக்கு’ என்கிற பீதியுடன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார். அந்த பில்டப்பை அப்படியே மெயின்டெயின் செய்தார் மாகாபா. இருவரும் விஜய்டிவி பிராடக்ட் என்பதால் அந்த அந்நியோன்யத்தோடு பேசிக் கொண்டார்கள். “பிக் பாஸ் மூலமா என்ன கத்துக்கிட்டீங்க?” என்று மாகாபா கேட்க “ஒரு விஷயத்திற்கு தெளிவாக ‘நோ’ சொல்ல கத்துக்கணும். அதைக் கத்துக்கிட்டேன்” என்றார் விஷால். தர்ஷிகா கற்றுத் தந்த பாடம் இது.
அடுத்து வந்தவர் ஜாக்குலின். இவருமே அதே சானல் பிராடக்ட். “எங்க வீட்டு சமையக்காரம்மா கேட்கச் சொன்னாங்க” என்று ஆரம்பித்து கேஷூவலாக பல கேள்விகளைக் கேட்டார் ஆனந்த். “கோவா கேங் எப்படியிருக்கிறது?” என்கிற கேள்விக்கு மறைமுகமாக இயங்கிக் கொண்டிருப்பதாக சொன்னார் ஜாக்குலின். (அப்ப விசே கரடியா கத்தினதெல்லாம் வேஸ்ட்டா கோப்பால்?!). ‘சவுந்தர்யாவிற்கும் ரயானிற்கும் நிச்சயம் விட்டுத்தர மாட்டேன். அவங்க யூஸ் பண்ற க்ரீம் விலையே நாலாயிரம் ரூபா இருக்கும்’ என்று ஜாக்குலின் சொல்வதின் மூலம் அவர்கள் பணக்காரர்கள் என்கிற ஃபீலை வரச் செய்தார்.
ஜாக் கேஷூவலாக சொன்ன அந்த ஸ்டேட்மெண்ட் பிறகு சின்ன சர்ச்சையாக மாறியது. ரயான் இயல்பாக எடுத்துக் கொண்டாலும் சவுந்தர்யாவின் தீவிரமான ஆதரவாளராக உள்ளே வந்திருக்கும் அன்ஷிதா, இதை சீரியசாக எடுத்துக் கொண்டு ‘அப்படிப் பேசியது தப்பு. எனக்கு அது ஜாலியா தோணலை” என்று ஜாக்கிடம் சண்டை பிடித்தார்.
அடுத்து சென்றவர் ரயான். “ரயானா உள்ள வந்தவரை கிரயான்ஸா மாத்தி வெச்சிருக்காங்க” என்று பச்சைத்தலையை கிண்டலடிததார் ஆனந்த். கிரிக்கெட்டை ஹாபியாக கொண்ட ரயான், கராத்தேவில் பிளாக்பெல்ட்டாமே?! ‘யாரைப் பிடிக்கும் சவுண்டா ஜாக்கா? ஒருத்தர் பேரைத்தான் சொல்லணும்?” என்கிற வில்லங்கமான கேள்வியை ஆனந்த் கேட்க, சற்று யோசித்து ‘ஜாக்குலின்’ என்று சொல்லி வீட்டிற்குள் இருந்த ஜாக்கை வாய் பிளக்க வைத்தார் ரயான். (சவுண்டு கிட்ட அப்புறம் சொல்லிக்கலாம்!). மஞ்சரியிடம் லவ் அட்வைஸ் கேட்க பிடிக்குமாம்.
ரயானை ஹீரோவாக வைத்து படம் தயாரித்தால் யார் யார் எந்த கேரக்டர் என்கிற கற்பனை சுவாரசியம். அப்பா -ரஞ்சித், அம்மா - ஜாக்குலின் (அடப்பாவி!) தங்கச்சி - சாச்சனா, லவ்வர்ஸ் - சவுந்தர்யா மற்றும் பவித்ரா. (கண்ணா.. ரெண்டு லட்டு தின்ன ஆசையா?!) பிரெண்டு - விஷால், வில்லன் - சத்யா, காமெடியன் - ஜெப்ரி, பக்கத்து வீட்டு ஆயா - மஞ்சரி என்று சுவாரசியமாக பதில் அளித்து எஸ்கேப் ஆனார் ரயான். படத்தை விஷால் டைரக்ட் செய்தால் நன்றாக இருக்குமாம். (யாரு. மதகஜராஜா விஷாலா?!)
அடுத்து வந்தவர் ரியாக்ஷன் க்வீன் சவுந்தர்யா. எனவே விதம் விதமான எக்ஸ்பிரஷன்களை தந்து சோதித்தார் மாகாபா. ‘குயிலப் பிடிச்சு கூட்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்’ மாதிரி சவுந்தர்யாவிற்கு செயற்கையாக நடிக்க வரவில்லை. ‘எனக்கு ஃபேக்கா சிரிக்கத் தெரியாதே?’ என்று சொல்லி மாகாபாவிற்கு மட்டுமல்லாது உலகத்திற்கே அல்வா கொடுத்தார் சவுண்டு. கோவா கேங் உறுப்பினர்களைப் பற்றி வெளிப்படையாக சொன்னவர், சேஃப் கேம் ஆடுகிறவர்களாக விஷால் மற்றும் முத்துவைக் குறிப்பிட்டார்.
அடுத்து வந்தவர் முத்து. ‘பேச்சாளர்’ என்று ஆரம்பித்தவுடனேயே ‘பேச்சுத்திறமை மட்டுமே தகுதி கிடையாது. அப்படிப் பார்த்தா மஞ்சரி போயிட்டாங்களே. ஆனா பேச்சாளர் வெற்றி பெற்றா அதுவொரு நல்ல முன்னுதாரணமா இருக்கும்’ என்று பிளேட்டை மாற்றியும் போட்டார். “உங்களுக்குப் பதில் இன்னொரு ஆளை உள்ளே அனுப்பலாம்ன்னு இருந்தா யாரை செலக்ட் செய்வீங்க?” என்கிற கேள்விக்கு மஞ்சரி என்று முத்து சொன்னது எதிர்பார்க்கக்கூடியதே. (நண்பேன்டா!)
முத்துவின் பெரிய கனவு சினிமாவில் நடிப்பதாம். என்எஸ்கே, விவேக் மாதிரி பெரிய காமெடியனாக வர வேண்டுமாம். “யப்பா.. நீங்க பேசறதைப் பார்த்தா எனக்கே மூச்சு முட்டுது” என்று ஜொ்க் ஆனார் ஆனந்த். முத்து ஹீரோவாக நடித்தால் யார் யார் எந்த கேரக்டர் என்கிற விளையாட்டு இவருக்கும் நடந்தது. படத்தை ரஞ்சித் இயக்கினால் நன்று என்று முத்து சொன்ன போது ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித்தோ என்று தோன்றி விட்டது. பிறகு பார்த்தால் வீட்டிற்குள் இருக்கும் ரஞ்சித். (ஓ.. அவரும் டைரக்ட் பண்ணியிருக்கார்ல!)
வெளியில் வந்த முத்துவிடம் “என்னையா வில்லின்னு சொல்றே?” என்று கரும்பால் ஜாலியாக அடித்தார் சாச்சனா. அன்ஷிதாவும் அர்னவ்வும் வீட்டிற்குள் சரியாக பேசிக் கொள்வதில்லை என்கிற விஷயம் அப்பட்டமாக தெரிந்தது. ‘இன்னமும் யார் சாப்பிடலை?’ என்கிற கேள்விக்கு பவித்ராவின் மூலமாக அர்னவ் பதில் சொல்லி அனுப்ப “ஏன்.. ரெண்டு பேரும் நல்லாத்தானே பேசிட்டிருந்தீங்க?” என்று பவித்ரா கேட்க “நீ கரும்பை மட்டும் மெல்லு. வம்பை மெல்லாதே’ என்கிற மாதிரி அவாய்ட் செய்த அர்னவ். “அவங்களுக்கு என்னப்பா.. ஒரு கேங்கோட செட்டில் ஆயிட்டாங்க. நாம நம்ம வேலையைப் பார்ப்போம்’ என்று ஆதங்கத்துடன் அனத்தினார்.
இன்றைய ப்ரமோவில் விஷால் பணப்பெட்டி டாஸ்க்கில் தோற்பது போல் பரபரப்பாக காட்டப்படுகிறது. எனில் அப்படியிருக்காது என்றே எடுத்துக் கொள்ளலாமா? அதுதானே ப்ரமோ எடிட்டிங்கின் வேலை?!