சூர்யா - வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு எப்போது? - காத்திருக்கும் ஆச்சரியங்கள்!
'விடுதலை 2'க்கு கிடைத்த வரவேற்புகளினால் ஆர்ப்பாட்டமாக மகிழாமல், எளிமையான புன்னகையால் கடந்துவிட்டார் வெற்றிமாறன். பொங்கல் ஸ்பெஷலாக அவரின் இயக்கத்தில் சூர்யா இணையும் 'வாடி வாசல்' படத்தின் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே 'விடுதலை'யை தயாரித்த எல்ரெட் குமாரின் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்திலும் இணைந்துள்ளார். அதில் இம்முறையை தனுஷுடன் கைகோர்க்கிறார். 'வாடிவாசல்' படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியின் படப்பிடிப்பு எப்போது என விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..
மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் காம்போ
'விடுதலை 2' படம் வெளியாகி 25 நாட்களை கடந்ததும், அதன் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிரடி அறிவிப்புகள் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் ஒரு படமும், 'விடுதலை'யில் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் ஒரு படமும் தயாரிக்க உள்ளதாக அறிவித்தனர். வெற்றிமாறன் சூர்யாவின் 'வாடி வாசல்' படத்தை இயக்குவார் என்ற பேச்சு பரவலான சூழலில், அவர் தனுஷை இயக்கப் போகிறார் என்ற தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இந்த சூழலில் தான் தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறன், சூர்யா மூவரும் இணைந்து 'வாடிவாசல்' விரைவில் தொடங்கும் என்பதை உறுதி செய்தனர்.
எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் படம் எப்போது துவங்கும் என்பது இன்னமும் திட்டமிட்டப்படவில்லை. 'கர்ணன்' படத்திற்கு பின் மாரி செல்வராஜுடன் மீண்டும் இணைகிறார் என்பது போல, சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு முன்னரே, ராஜ்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது முடிவானது. இப்படி அடுத்தடுத்த லைன்அப்களை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்து, ஓடிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அதன்படி வெற்றிமாறனுடன் இணைகிறார். இதன் படப்பிடிப்பு இந்தாண்டில் நடைபெறும். அதே சமயம், வெற்றிமாறன் 'வாடி வாசல்' படத்தை முடித்துவிட்டு தான் தனுஷை இயக்குகிறார்.
வாடிவாசல் எப்போது?
'விடுதலை 2'வை முடித்துவிட்டு 'வாடிவாசல்' படத்தை இயக்குவேன் என வெற்றிமாறன் சொன்னார். அவர் சொன்னது போலவே, சூர்யாவின் படத்தை தொடங்குகிறார். இப்போது ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடித்து வரும் சூர்யா, அதனை முடித்துவிட்டு 'வாடிவாசல்' படத்திற்கு வருகிறார். அவர் வருவதற்கு முன்னர் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட நினைத்திருக்கிறார் வெற்றி.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்திற்கான டெஸ்ட் ஷூட்டை செய்து பார்தார் வெற்றிமாறன். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும், அந்த ஷூட் ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோவில் ஜல்லிக்கட்டு காளைகளை வரவழைத்து வாடிவாசல் போல செட் அமைத்து நிஜகாளைகளுடன் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன்பின்னர் ரியல் லொக்கேஷனான மதுரையிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி பார்த்ததினர். அப்போதுதான் படப்பிடிப்பில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்தனர்.
அதன் பின்னரே, சில காட்சிகளை அனிமேஷனில் உருவாக்கி கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் வெற்றி. அதை தயாரிப்பாளர் தாணுவிடமும் தெரியப்படுத்த, ''யாருக்கும் எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது.' என்ற அவர் சொன்ன பிறகே லண்டனில் உள்ள அனிமேஷன் ஸ்டூடியோவிலும் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பித்தனர். 'ஜூராஸிக் வேல்ர்டு' படத்தில் பணியாற்றிய ஜான் ரோல்டன் என்பவரின் மேற்பார்வையில் 'வாடிவாசல்' படத்திற்கான வேலைகள் ஆரம்பித்தனர். 'விடுதலை 2'விற்கு பின், இப்போது முழுவீச்சில் இந்த வேலைகளும் ஒரு பக்கம் வேகமெடுக்கின்றன. மார்ச் மாதத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்களும் வரவிருக்கின்றனர் என்கின்றனர்.