3 வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா! அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார்!
3 வது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா இன்று (ஜன.16) நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தாண்டு (2025) 3 வது பன்னாட்டு புத்தகத் திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இன்று (ஜன.16) முதல் சனிக்கிழமை (ஜன.18) வரையிலான 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் அமெரிக்க, மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட 65 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க: கரூர் ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்!
இந்த திருவிழா நடைபெறும் 3 நாள்களும் நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த திருவிழா நடைபெற்றப்போது 24 நாடுகளும், 2024 ஆம் ஆண்டு 40 நாடுகளும் பங்கேற்றிருந்த நிலையில் தற்போது 65 நாடுகள் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.