ஸ்பேடெக்ஸ் திட்டம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!
விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததையடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ் எனும் ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது.
இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து கடந்த டிச.30-ஆம் தேதி விண்ணில் செலுத்தி புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளத்தில்,
விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைப்பதை வெற்றிகரமாக நிரூபித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரர்களுக்கும் வாழ்த்துகள். இது எதிர்காலத்தில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்கப் படியாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.