Elon Musk: `ட்விட்டரை வாங்கியதில் எலான் மஸ்க் மோசடி?' - வழக்கு தொடுத்துள்ள அமெரிக்க 'செபி' SEC!
'எலான் மஸ்க் அமெரிக்க பங்குச்சந்தையை ஏமாற்றியுள்ளார்' என்று அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற அமைப்பு.
அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற கமிஷன் என்பது நம் நாட்டின் செபி அமைப்பை போன்றதாகும். இது வாஷிங்டன் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. அதில், "எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக கூறிய 2022-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதிக்கு முன்பே, ட்விட்டர் நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்கை வாங்கியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற அமைப்பு சட்டத்தின் படி, ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் 5 சதவிகிதத்திற்கு மேல் வாங்கினாலோ, வைத்திருந்தாலோ, அந்தத் தகவலை அவர் பங்கு வாங்கிய 10 காலண்டர் நாட்களுக்குள் வெளியிட வேண்டும்.
ஆனால், எலான் மஸ்க் 11 நாட்கள் கழித்தே தான் வாங்கிய 5 சதவிகிதப் பங்கு குறித்து வெளியில் தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் பங்கு வாங்கியிருப்பது தெரிந்தால், அந்தப் பங்கின் மதிப்பு மிகவும் உயர்ந்துவிடும் என்பதால், செயற்கையாக உருவாக்கப்பட்ட குறைந்தத் தொகையில் அவர் கிட்டதட்ட 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கிட்டத்தட்ட 5 சதவிகித ட்விட்டர் பங்கை வாங்கி உள்ளார்.
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக கூறிய தருணத்தில், அவரிடம் அந்த நிறுவனத்தின் 9.2 சதவிகிதப் பங்கு இருந்தது. அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதும், ட்விட்டரின் பங்கு மதிப்பு 27 சதவிகிதத்திற்கும் மேல் எகிறியது.
இப்படி எலான் மஸ்க் மறைத்ததன் மூலம் அவருக்கு கிட்டத்தட்ட 150 மில்லியன் டாலர் லாபம் கிடைத்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.