ஈரோடு இடைத் தேர்தல்: பிரதான கட்சிகள் புறக்கணிப்பு; ஆர்வம் காட்டும் சுயேச்சைகள்..!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்தத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸுக்குப் பதிலாக அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக நேரடியாக களமிறங்குகிறது. திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் 10-ஆம் தேதி தொடங்கியது. அதையடுத்து, 13-ஆம் தேதியும், அதன் பிறகு பொங்கல் விடுமுறையை முடிந்து 17-ஆம் தேதியும் வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முதல்நாளில் தேர்தலில் 247-ஆவது முறையாக போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன் முதல் ஆளாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, கரூர் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மதுரை விநாயகம், கோவையைச் சேர்ந்த நூர் முகமது ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, 13-ஆம் தேதி 6 சுயேச்சைகள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதன் மூலம் மொத்தம் 9 பேர் இதுவரை வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்வம் காட்டும் சுயேச்சைகள்..
வேட்புமனுத் தாக்கலுக்கு 17-ஆம் தேதி கடைசி நாள் மற்றும் நல்ல நாள் என்பதால் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2023-ல் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது மட்டும் 75-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதைப் போலவே வரும் 17-ஆம் தேதியும் அதிகமான சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
அதுமட்டுமில்லாமல், வேட்புமனுவை வாபஸ் பெற ஆளுங்கட்சித் தரப்பிடம் இருந்தும் வலுவான தொகை வழங்கப்பட உள்ளதாக ஈரோடு அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. இதற்காகவே, சுயேச்சையாக சிலர் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தவெக ஆகியவை தேர்தலை புறக்கணித்துள்ளதால் ஈரோடு தேர்தல் களம் மந்தமாகவே இருக்கிறது. தை 1-ஆம் தேதி முதல் திமுக பிரசாரத்தை தொடங்கவுள்ளதால் தேர்தல் சூடிபிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.