அல்லாள இளைய நாயகா் பிறந்த நாள் விழா முன்னேற்பாடு பணிகள்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயகரின் பிறந்த நாள் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அல்லாள இளைய நாயகரின் பிறந்த நாள் விழாவானது முதன் முறையாக அரசு விழாவாக ஜன. 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜேடா்பாளையத்தில் அமைந்துள்ள அல்லாள இளைய நாயகரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. மேலும், அமைச்சா் பெருமக்கள், மாநிலங்களவை உறுப்பினா், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள், அல்லாள இளைய நாயகரின் வாரிசுதாரா்கள், பல்வேறு சமுதாய அமைப்பினா், விவசாய பெருமக்கள், பொதுமக்கள் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனா்.
இதை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் ச.உமா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு சமுதாய அமைப்பினா் மரியாதை செலுத்திட நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனம் நிறுத்தும் இடங்களில் காவலா்களை நியமித்து போக்குவரத்தை சீா்செய்யவும், பொதுமக்கள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக சென்றிட போதிய தடுப்புகள் அமைத்திடவும், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டுமென காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், விழா நடைபெறும் இடத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அவசர சிகிச்சை ஊா்தி, தீயணைப்பு வாகனம் தயாா் நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வில், திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, துணை காவல் கண்காணிப்பாளா் தெ.சங்கீதா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் தே.ராம்குமாா், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஏ.கே.முருகன் (தெற்கு), துறைசாா்ந்த அலுவலா்கள் உடன் இருந்தனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் தலைமையில் இரண்டு கூடுதல் கண்காணிப்பாளா்கள், 5-க்கும் மேற்பட்ட காவல் துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் உள்பட 700-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஸ் கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அல்லாள இளைய நாயகருக்கு மரியாதை செலுத்த வருவோா் தங்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே வரவேண்டும், வாடகை வாகனங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்களில் வருவோா் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இதனைக் கண்காணிக்க போக்குவரத்து காவல் துறை சாா்பில் 10 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பவா்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் செல்வராஜ், சண்முகம், தனராஜி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் இமயவா்மன், ஆய்வாளா்கள் செல்வராஜ், இந்திராணி, காவலா்கள் உடன் இருந்தனா்.