அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: "வாடிவாசல்ன்னு வந்துட்டா இவன் கொஞ்சம் 'டெரர்' தான்" - வீர திருநங்கை அக்ஷயா
தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் வாடி வாசலில் காளைகள் சீறி பாய்ந்து கொண்டிருக்க மறுபுறம் தன்னுடைய வாய்ப்பிற்காக நீண்ட வரிசையில் மருத்துவ பரிசோதனையில் காளைகள் காத்திருக்கின்றன. அதில் வீர திருநங்கை ஒருவர் தன்னுடைய காளையுடன் வரிசையில் இருப்பதை பார்த்தோம். அவரிடம் சென்று விசாரித்த போது: "என் பேரு அக்ஷயா. நாங்க மதுரை பொட்டபாளையம்ல இருந்து வரோம். வாடியில்ல எங்க அம்மா பேரு "நான் கடவுள் கீர்த்தனன்னு" சொல்லி தான் காளைய அவுத்து விடுவோம். இவன் பேரு (காளை) கிருஷ்ணா.
ரொம்ப நெருக்கமா பாசமா இருப்பான். ஆனா வாடின்னு வந்துட்டா கொஞ்சம் டெரரு தான். அஞ்சு வருஷமா நிறைய போட்டிக்கு போயிருக்கான்.. அலங்காநல்லூர் வாடிக்கு போய் இருக்கான்.. நிறைய பரிசு அடிச்சு இருக்கான். அண்டா, தங்கக்காசு அப்படின்னு.. ஆனா அவனியாபுரத்தில் இதுதான் அவனுக்கு மொத வாடி.. இவனுக்கு பயிற்சி எல்லாம் என்னோட தம்பிகள் தான் கொடுப்பாங்க.. நாங்களும் அப்பப்போ போய் பார்த்துக்குவோம். ஏழு வருஷமா மாடு வளர்த்துக்கிட்டு இருக்கோம் எங்ககிட்ட ஏழு மாடு இருக்கு. ஏழுமே எங்க மேல ரொம்ப பாசமா இருக்கும். நாங்களும் ரொம்ப அக்கறையா பார்த்துப்போம்." என்று வீரம் கலந்த பாசத்துடன் கூறினார்.