செய்திகள் :

Pongal : அதென்ன `தமிழ் முஸ்லிம் பொங்கல்?' - முஸ்லிம்கள் எப்படி பொங்கல் கொண்டாடுவார்கள் தெரியுமா?!

post image

தமிழ் கலாசாரத்தை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் விழாவில் மிக முக்கியமானது பொங்கல். மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள், ஆடி மாதத்தில் விதைத்த நெல்லை தை மாதத்தில் அறுவடை செய்து, தைப்பொங்கலை மிக விமரிசையாக கொண்டாடி வருகிறோம். சங்க இலங்கியங்கள் பதிவு செய்திருக்கும் இந்தப் பொங்கல் விழா, நமது மரபின் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கை முறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுவதில் வியப்பில்லை. ஆனால், 'முஸ்லிம் பொங்கல்' என்ற சொற்றொடரை ஒரு கட்டுரையில் காண நேர்ந்தது. அதென்ன ``முஸ்லிம் பொங்கல்?"... பொங்கல் என்றால் எல்லாமே பொங்கல்தானே... என்ற சந்தேகத்துடன் 'முஸ்லிம் பொங்கல்' என்ற வார்த்தையை நோக்கி பயணித்தோம்.

பொங்கல்

தமிழ் முஸ்லிம்களின் வரலாறு மற்றும் கலாசார அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட, சர்வதேச விருதுகளை வென்ற 'யாதும்' ஆவணப்பட இயக்குநர் கோம்பை அன்வரைச் சந்தித்தோம். பொங்கலுக்கான தயாரிப்புகளைச் செய்துகொண்டே பேசிய அவர், ``பெரும்பாலும் டெல்லி சுல்தான்களையும், முகலாயரையும் வைத்துக் கட்டமைக்கப்பட்ட இந்திய முஸ்லிம்கள் வரலாற்றில், சேர்க்க முடியாத ஒருச் சமூகம் என்றால் அதுத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமிய சமூகம்.

அதனால்தான் தமிழக, இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியா வரை பரவிக் கிடக்கும் அந்தச் சமூகம், தனக்கென்று பல தனித்துவக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் அது பலருக்கும் தெரியாது. சங்க காலம் தொட்டே தமிழகத்திற்கும் அரேபியா உள்ளிட்ட மேற்கு ஆசியாவிற்கும் இடையே கடல்வழி வணிகத் தொடர்புகள் இருந்ததைப் பல சங்கப் பாடல்களும், சமீபத்திய அகழ்வாராய்ச்சிகளும் உறுதிப்படுத்துகின்றன. அரேபிய பாலைவனத்தில் 7-ம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவத் தொடங்கிய சமகாலத்திலேயே அது வணிகர்கள் மூலமாக தமிழகத்தையும் வந்தடைந்தது.

தமிழ் முஸ்லிம்கள்

இங்கு நிலவிய சமூகச் சூழல், இறைநேசர்கள் எனப்படும் சூபிக்களின் பரப்புரை, தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களின் ஆதரவு உள்ளிட்டக் காரணங்களால் இஸ்லாம் தமிழகத்தில் வேரூன்றியது. இதற்குக் கிட்டத்தட்ட 500 வருடங்களுக்குப் பிறகே வட இந்தியாவில் இஸ்லாம் ஒரு வலுவான மதமாகப் பரவியது என்ற தகவல் இங்கே முக்கியமானது. வாணிபரீதியிலான மிக இணக்கமான ஓர் உறவு இங்கு இருந்ததால்தான், பிற சமயங்களுக்கு இணையாக தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு, சிலம்பம் உள்ளிட்ட மரபுக் கலைகள் எனத் தமிழ் மண்ணோடு இஸ்லாம் தன்னை வலுவாகப் பிணைத்துக்கொண்டது. அதன் வழியேதான் தமிழர் திருநாளான பொங்கலையும் தமிழ் முஸ்லிம்கள் தங்கள் இஸ்லாமிய நெறிகளுக்கு உட்பட்டு கொண்டாடிவருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள எங்கள் வீட்டில் சர்க்கரைப் பொங்கலுடன் ஆரம்பிக்கும் பொங்கல் திருநாள், மதிய விருந்தில் 16 வகை காய்கறிகளுடன் களைகட்டும். பரிமாறப்படும் பெரும்பாலான காய்கறிகள் வயலிலிருந்து வந்தவையாக இருக்கும். மாட்டுப் பொங்கல் அன்று பண்ணை மாடுகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து, கொம்புக்கு வர்ணம் பூசி ஊரை வலச் செய்வோம். என் அம்மாவுக்கு இப்போது 80 வயதுக்கும் மேல். ஆனால், அவருக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இப்படித்தான் பொங்கல் விழா வீட்டில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இப்படி கணக்கிட்டாலே எங்கள் வீட்டில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பாரம்பரியம் தொடர்கிறது" என்றார்.

குடும்பத்துடன் பொங்கள் விருந்தில் கோம்பை அன்வர்

அப்படியானால், பொங்கல் கொண்டாட்டம் பகுதிக்கு ஏற்றவாறு மாறுபடுமா? என்றக் கேள்வியுடன், 'முஸ்லிம் முரசு' மாத இதழின் முன்னாள் ஆசிரியர் சடையன் அமானுல்லாவின் கதவை தட்டினோம். 'வாங்க தம்பி...' என வரவேற்றவர், ``நாங்கள் தஞ்சை ஜில்லாவை சேர்ந்தவர்கள். நான் சிறுவனாக இருந்தபோது கொண்டாடிய பொங்கல் போல இப்போதெல்லாம் கிடையாது. தஞ்சை (டெல்டா பகுதி) மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்தான். பொங்கலுக்கு முன்பே வயலிலிருந்து ஒரு மூட்டை புது நெல் கொண்டுவந்துவிடுவார்கள். அதை வீட்டில் இருக்கும் பெண்கள் சேர்ந்து அவித்து, காயவைத்து, கைகுத்தல் அரிசியாக மாற்றி பொங்கலுக்கு சமைக்கத் தயாராக வைத்திருப்பார்கள்.

இந்த நெல் மூட்டையுடன் அடிக்கப்படாத நெற்கதிர் கொத்தும் வரும். அதைப் பறவைகள் சாப்பிட நெற்கதிர் முற்றத்தில் தலைகீழாக கட்டி தொங்க வைத்திருப்பார்கள். அந்தக் கைகுத்தல் அரிசியை சமைத்து, அதை மூன்றாகப் பிரிப்பார்கள். முதல் பங்கு உறவினர்களுக்கு, இரண்டாம் பங்கு அக்கம் பக்கத்தினருக்கு, மூன்றாம் பங்கு பள்ளிவாசல் பணியாளர்களுக்கு எனக் கொடுப்பார்கள். பொங்கல் அன்று அக்கம்பக்கம் வீட்டரும், சொந்தங்களை வரவழைத்து கறியோ, தால்ச்சாவோ செய்து 'புத்தரிசிச்சோறு' விருந்து நடக்கும்.

முஸ்லிம் பொங்கல் கொண்டாட்டம்

இப்படி பெரும் விருந்து மூன்று நாள் முதல் ஒருவாரம் வரை நடக்கும். புதுச்சோறு விருந்து வைக்கும் ஒவ்வொரு குடும்பமும் நாளை முன்பே குறிப்பிட்டு அழைத்துவிடுவார்கள். இது தஞ்சாவூர் ராவுத்தர் வீட்டுப் `புத்தரிசிச் சோறு' பொங்கல். மாட்டுப்பொங்கல் அன்றும் எல்லோரையும் போல மாடுகளை அலங்கரித்து ஊர்வலம் அழைத்துச் செல்வோம். நெல் அறுவடை முடிந்ததும், பள்ளிவாசல் பங்கு, கோயில் பங்கு, குடியானவங்க பங்கு எனப் பிரித்துவிட்டுதான் அடுத்த வேலையையே தொடங்குவார்கள்" என்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பிண்ணனியைக்கொண்ட எழுத்தாளர் ஹுதாவிடம், 'உங்க பொங்கல் அனுபவம் எதாவது இருக்கா....'' எனக் கேட்டோம். பொங்கள் பானையுடன் இருந்த எழுத்தாளர் ஹுதா, ``பொங்கல் கதையெல்லாம் கேட்டா நிறைய இருக்கே... எத சொல்ல எதை விடுறதுனு தெரியல... பொங்கல் அன்னைக்கு வயல்ல வேலை செய்றவக கரும்பு, வீடுகல்ல வளக்குற கோழி, முட்டைலாம் கொண்டுவந்து கொடுத்து வாழ்த்து சொல்வாக... எங்கவூட்ல, அவகளுக்குப் புதுத்துணி, பணம் கொடுத்து வாழ்த்துவோம். பொங்கல் அன்னைக்கு பிதுக்கு பருப்பு (மொச்சைப் பயறு), அன்னைக்கு கிடைச்ச சீசன் காய்கறிகள்ல குழம்பு வச்சி சாப்பிடுவோம்.

எழுத்தாளர் ஹுதா

பொங்கல் கொண்டாடுறதை விட மாட்டுப்பொங்கல்தான் எங்கூருல பெருசா கொண்டாடுவோம். கொட்டகையை சுத்தம் பண்ணி, அவகளுக்கு (மாடுகளுக்கு) பெயிண்ட் அடிச்சி, குளிப்பாட்டி, சாம்பிராணி போட்டு ராசாத்தி மாதிரி ஆக்கிருவோம். அவக திண்ண 'பாச்சோறு' ஆக்குவோம். பாச்சோறை மட்டும் தனியா நிறையக் கொடுக்கக் கூடாது. அதனால கழனிதண்ணில கலந்துவிட்டுருவோம். அதுக்கு அப்புறம்தான் தெருவுல இருக்குல எல்லார் வூட்டுக்கும் போய் பாச்சோறு கொடுத்துட்டு வருவோம். இப்படிதான் பொங்கல் போவும். நெல்லு அடிச்சி வர பிஸ்மி நெல் (முதல் நெல்)ல லாபம்னு மொத நெல்ல எடுத்து வச்சிருவோம்.

அதை ஊர்ல இருக்குற காதர் மஸ்தான் தர்கா, மொச்சிவிளக்கு தர்கா, மாடன் கோயிலு, வடபாச்சியம்மன் கோயிலு, சுப்ரமணிய கோயிலு, வீரகாளியம்ம கோயிலுனு எல்லாருக்கும் கொடுத்துட்டு, அப்புறம்தான் பங்காளிக்கும் நமக்கும் எடுப்பாக. அதுக்கு அப்புறம் புது பச்சரிய இடிச்சி துள்ளுமாவு எடுத்து, பாச்சோறு கிண்டுவோம். புது புழுங்க அரிசிச்சோறு ஆக்கி, மீன் எடுத்து ஆணம் காச்சுவாக. அதை உறவுமுறைகளுக்கு கொடுத்தணுப்புவோம். புது நெல்லு சோறு ஆக்கினா தெரு அடைக்கனும்... (தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் துள்ளுமாவு, பாச்சோறும் கொடுப்பது) இல்லனா தெருகாரவுக கோச்சிக்குவாக. இதெல்லாம் இப்போவும் சில ஊர்கள்ல இருக்கு." எனப் பேசிக்கொண்டே பொங்கல் பானையில் வரைந்து முடித்திருந்தார்.

குடும்பத்துடன் பொங்கள் கொண்டாடும் எழுத்தாளர் ஹுதா

சங்க காலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர் என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் இருபத்திரண்டாம் பாடல் விளக்குகிறது. ‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’ என்று குறந்தோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவைச் 'சாறு கண்ட களம்' என வருணிக்கின்றார். எனவே, ஓரிறைக் கொள்கையில் ஆழமான நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்கள், அனைத்துக்கும் இறைவன் ஒருவனே காரணம் என்றே முழுமையாக நம்புகிறார்கள். அதனால், இன்றளவும் பல்வேறு கிராமங்களில் முஸ்லிம்கள் பொங்கலை தமிழர் கலாசாரத்துடன் தொடர்புடைய மரபாக பின்பற்றுகின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிய TTV தினகரன் காளை; நின்று விளையாடிய VK சசிகலா காளை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் கண்ட சசிகலா, தினகரன் காளைகள் வெற்றி பெற்றுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு மரபார்ந்த வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் பல ஊர்களில்... மேலும் பார்க்க

கடல் அன்னையை சாந்தப்படுத்தும் ஷப்த கன்னிகள்.. பொங்கல் தினத்தில் மீனவர்கள் கொண்டாடும் நன்றி திருவிழா!

தங்கள் வாழ்விற்கும் வளத்திற்கும் உறுதுணையாக இருப்பவர்களுக்கு நன்றி கூறி கொண்டாடுவது தமிழரின் மரபு. வேளாண்மைக்கு வழிகாட்டும் கதிரவன். உழவுக்குத் துணை நிற்கும் காளைகள் என தங்களுக்கு உதவியாக இருப்பவர்களை... மேலும் பார்க்க

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: "வாடிவாசல்ன்னு வந்துட்டா இவன் கொஞ்சம் 'டெரர்' தான்" - வீர திருநங்கை அக்ஷயா

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் வாடி வாசலில் காளைகள் சீறி பாய்ந்து கொண்டிருக்க மறுபுறம் தன்னுடைய வாய்ப்பிற்காக நீண்ட வரிசைய... மேலும் பார்க்க

அவனியாபுரம் : துறுதுறு இளைஞர்கள்... சீறும் காளைகள் - டிராக்டர், நிசான் கார் பெறப்போவது யார்?!

உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகத்தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மதுரை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அவனியாபுரம் ... மேலும் பார்க்க

Mumbai: 1,000 பேர் கலந்துகொண்ட தாராவி பொங்கல்... சிறப்பு விருந்தினர் ஓவியா கலகல பேச்சு!

ஒவ்வோர் ஆண்டும் மும்பை, தாராவியில் தமிழர்கள் அலைகடலெனத் திரண்டு பொங்கல் கொண்டாடுவது வழக்கம். தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைக்கும் பொங்கல் விழாவானது 90 அடி சாலையில் கோலாகலமாக கொண்டாடப்படும்.சக்தி விநாயகர் ... மேலும் பார்க்க

Pongal: அமெரிக்கா முதல் இஸ்ரேல் வரை; உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள்!

விவசாயம், மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியில் மிகப் பெரிய மைல்கல். சரியான பயிர்களைக் கண்டறிந்து, காடு மேடுகளை உடைத்து நிலமாக்கி, அதை பண்பட உழுது, பருவம் பார்த்து விதைத்து, தண்ணீர் பாய்ச்சி அறுவடை செய்யு... மேலும் பார்க்க