Pongal: அமெரிக்கா முதல் இஸ்ரேல் வரை; உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள்!
விவசாயம், மனித இனத்தின் நாகரிக வளர்ச்சியில் மிகப் பெரிய மைல்கல். சரியான பயிர்களைக் கண்டறிந்து, காடு மேடுகளை உடைத்து நிலமாக்கி, அதை பண்பட உழுது, பருவம் பார்த்து விதைத்து, தண்ணீர் பாய்ச்சி அறுவடை செய்யும் அறிவு பல தலைமுறைகளின் பட்டறிவு.
இயற்கையை நாம் முழுமையாக பயன்படுத்திய முதல் தொழில் பயிர் தொழில்தான். நாம் விதைத்தாலும், பாத்தி கட்டினாலும், கால நேரம் அறிந்து உழைத்தாலும் அறுவடை இயற்கை தருவதுதான் என்பதை மனிதர்கள் உணர்ந்திருந்தார்கள்.
அறுவடைத் திருவிழா என்பது நம் உழைப்பின் பலனை அடைந்ததற்கான மகிழ்ச்சியை கொண்டாடுவது மட்டுமல்ல, நமக்கு உணவையும் வாழ்க்கையையும் அளிக்கும் இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதும்தான்.
தைப் பொங்கல் (Pongal) தமிழகர்களின் அறுவடைத் திருவிழா. உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்களது நிலம், விளைவிக்கும் பயிர், பருவ மாற்றம், நீர் வரத்து ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நாள்களில் அறுவடைத் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர்.
அறுவடை நாள், பயிர், செய்முறை, கலாசாரம் எல்லாம் மாறினாலும் இயற்கைக்கு தங்களின் நன்றியுணர்வை வெளிப்படுத்துவதில் உலக மக்கள் இணைந்திருக்கின்றனர்.
தேங்ஸ்கிவ்விங் (Thanksgiving), அமெரிக்கா
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ப்ளிமோத் பகுதியில் நன்றி செலுத்தும் விழா கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 4வது வியாழன் இந்த விழா நடைபெறுகிறது. 1621 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், இங்கிலாந்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் தங்களது உழைப்பில் விளைந்த முதல் கோதுமை பயிர் அறுவடையை மூன்று நாள் விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். இப்படியாக இந்த விழா தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தாங்கள் வேட்டையாடிய கௌதாரி, காட்டு வான்கோழி மற்றும் மீன்களை மசோயித், வம்பனோக் உள்ளிட்ட பூர்வகுடி அமெரிக்க பழங்குடியினருடன் பகிர்ந்துகொண்டனர். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் 1863ம் ஆண்டு இந்த நன்றி செலுத்தும் விழாவை (Thanksgiving) தேசிய விடுமுறையாக அறிவித்தார்.
வெண்டிமியா (Vendimia), அர்ஜெண்டினா
பிப்ரவரி மாதத்தின் இறுதி சனிக்கிழமையில், அந்த பருவத்துக்கான முதல் திராட்சையில் புனிதநீர் தெளித்து ஆசீர்வதிக்கிறார் அந்த மாகாணத்தின் பேராயர். பின்னர் அந்த திராச்டையை கடவுளுக்கு படைக்கிறார். அன்றிலிருந்து, அந்த மாதம் முழுவதும் மெண்டோசா மாகாணத்தில் கொண்டாட்டங்கள் தொடரும்.
ஆடல், பாடல் என வேடிக்கைகளில் இந்த திருவிழா நகரும். அழகிய பெண்களின் அணிவகுப்பைக் காண தெருக்களில் மக்கள் கூட்டம் குவியும். ரதங்களில் வரும் அழகிகளில் ஒருவர் அந்த ஆண்டுக்கான அறுவடை ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முடி சூட்டப்படுவார்.
அரிசி அறுவடை, இந்தோனேசியா
இந்தோனேசியாவில் குறிப்பாக பாலியில் அரிசான் பிரதான பயிர். அங்கு அரிசி கடவுளான தேவி ஶ்ரீ-யை போற்றி வணங்குகின்றனர். அறுவடையின்போது தெருக்களை கொடிகளால் அலங்கரிக்கின்றனர். வயல்களின் ஓரங்களில் அரிசி தெய்வத்துக்காக சிறிய மூங்கில் கோவில்களை எழுப்புகின்றனர். இது தீய ஆவிகளை விளைநிலத்தில் இருந்து விரட்டும் என நம்புகின்றனர். அரிசியால் சிறிய பொம்மை செய்து அதை தேவி ஶ்ரீயாக பாவித்து படையல் வைத்து கொண்டாடுகின்றனர்.
கொண்டாட்டத்தின் பகுதியாக மாட்டு பந்தையமும் பிற போட்டிகளும் நடத்துகின்றனர்.
சாந்தபுரி பழ திருவிழா, தாய்லாந்து
தாய்லாந்தில் உள்ள சந்தபுரி ரத்தின கற்களுக்கும் ரத்தினம் போல மினுங்கும் உள்ளூர் பழ வகைகளுக்கும் பெயர்பெற்றது. கோடையில் அறுவடையின்போது பழ கண்காட்சி நடத்துகின்றனர். புத்த மண்டலங்கள் போல லாங்கன், ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களைக் காட்சிப்படுத்துகின்றனர்.
சுக்கோட், இஸ்ரேல்
இஸ்ரேலில் கொண்டாடப்படும் சுக்கோட் திருவிழாவில் இஸ்ரேலியர்கள் பாலைவனத்தில் அலைந்த நாட்களை நினைவுபடுத்தப்படுகிறது. தற்காலிக கூடாரங்களில் தங்கி பயணித்ததை நினைவுபடுத்தும் விதமாக குடும்பங்கள் மேற்கூரை இல்லாத குடிசைகளை கட்டுகின்றனர். தாங்கள் அறுவடை செய்த தாவரங்களின் கிளைகள் (பெரும்பாலும் பேரீச்சை ஓலைகள், மூங்கில்கள்) கொண்டு கூரை போல வேய்கின்றனர்.
ஏழு நாட்கள் அந்த குடிசையில் உணவு அருந்துகின்றனர். சிலர் உறங்கவும் செய்கின்றனர். யூத நாட்காட்டியின் படி, த்ஷ்ரியின் 15வது நாளில் இந்த கொண்டாட்டம் தொடங்குகிறது (செப்டம்பர் - அக்டோபரில்). யூதர்கள் எலுமிச்சை போன்ற ஒரு பழம், வில்லோ குச்சி, myrtle பூ, பேரீட்சை ஆகியவற்றை ஒரு கொத்தாக செய்து அதைக்கொண்டு ஒவ்வொரு திசையிலும் நிலம் தங்களுக்கு கொடுத்தவைக்காக நன்றி சொல்கின்றனர்.
ஒலிவாகண்டோ, இத்தாலி
நவம்பர் மாதம் நடைபெறும் இந்த இரண்டு நாள் திருவிழா, புனித கிளெமென்ட் விழாவாகவும் ஆலீவ் அறுவடை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ஆலிவ் எண்ணெய் உற்பத்தியாளர்கள் அனைவரும் பங்குகொள்ளும் பூசையில் பாதிரியார் புதிய ஆலிவ் எண்ணெய்யை ஆசீர்வதிக்கிறார். Magione நகரில் இந்த திருவிழாவை ஒட்டி, 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையில் விருந்து நடைபெறுவது வழக்கம்.
லம்மாஸ் திருவிழா, இங்கிலாந்து
ஆகஸ்ட் 1ம் தேதி லம்மாஸ் திருவிழா கொண்டாடப்படுகிறது. வருடத்தின் இனி வரும் நாட்களில் அறுவடை தொடங்கி ஏராளமான உணவுகள் கிடைக்கப்போவதையும் இந்த விழாவில் கொண்டாடுகின்றனர்.
புதிதான பயிரில் இருந்து ரொட்டி தயாரித்து தேவாலயத்தின் பலிபீடத்தில் வைத்து வணங்குகின்றனர். சோள பொம்மைகள் செய்கின்றனர், உணவு மேசைகளை அலங்கரிக்கின்றனர்.
முந்தைய பிரித்தானியர்கள் (பாகன் வழிபாட்டில் இருந்தவர்கள்) இந்த வழிபாட்டைத் தொடங்கியுள்ளனர். பயிர்களுக்கான தெய்வங்களை (பெண் தெய்வங்கள்) வணங்கும் நாளாக இது இருந்துள்ளது. தாய்மையை கொண்டாடும் நாள் என்கின்றனர்.
மதீரா பூத் திருவிழா, போர்ச்சுகல்
ஏப்ரல் மாதத்தில் வசந்த காலத்தின் வருகையை எடுத்துரைக்கும் விதமாக பூக்களைப் பறித்து பூத் திருவிழாவை நடத்துகின்றனர். பாஞ்சல் நகரில் பூக்களைக் கொண்டு Muro da Esperança எனப்படும் நம்பிக்கையின் சுவரை எழுப்புகின்றனர். இதற்காக குழந்தைகள் அனைவரும் பூக்களை எடுத்துவர வேண்டும். தெருக்களில் பூக்களால் அழகான விரிப்புகளை செய்து மகிழ்கின்றனர். இளைஞர்களும் யுவதிகளும் நடனமாடி மகிழ்கின்றனர்.
இலையுதிர் காலத்தின் நடுப்பகுதி விழா, சீனா
சீனா மட்டுமல்லாமல் வியட்நாம், தைவான் நாடுகளிலும் மிக முக்கிய கலாசார விழாவாக இருப்பது அறுவடைத் திருவிழா. செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் இந்த திருவிழா நடைபெறுகிறது. பௌர்ணமியில் நடத்துவதால் இதை நிலவு திருவிழா என்றும் அழைக்கின்றனர்.
இந்த விழாவுக்காக விடுமுறை விடப்படுகிறது. அந்த நாளில் நிலா கேக் எனப்படும் சுவையான பண்டத்தைத் தயாரிக்கின்றனர்.
இந்த கொண்டாட்டத்துக்காக குடும்பங்கள் இணைகின்றன. பொது நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொதுவாக வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கவும் இந்த விழாவைப் பயன்படுத்துகின்றனர்.
யாம் திருவிழா, கானா
யாம் எனப்படுவது ஒருவகை கிழங்கு. கானாவில் உள்ள ஈவ் மக்கள் மழைக்காலத்தின் இறுதி நாளில், யாம் கிழங்கு அறுவடையை இந்த விழாவில் கொண்டாடுகின்றனர்.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இது அடுத்த ஆண்டு பஞ்சத்தை நீக்கும் என நம்புகின்றனர்.
கொண்டாட்டத்தின் பகுதியாக மக்கள் தங்களை அலங்கரித்துக்கொண்டு, பெரும் திரளாக நடனமாடுவது, அணிவகுப்பு நடத்துவது என களிக்கின்றனர். பப்புவா நியூ கினியா மற்றும் நைஜீரியா நாடுகளிலும் இதே போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.