விடாமுயற்சி டிரைலர் வெளியானது!
நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்தப் படத்தில் மங்காத்தா படத்திற்குப் பிறகு நடைகை திரிஷா அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக உருவாகியிருக்கும் ‘விடாமுயற்சி’ ஹாலிவுட் திரைப்படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் தழுவல் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், பாடகர் அறிவு எழுதி அந்தோணிதாசன் பாடிய முதல் பாடலான “சவதீகா” பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில் பட வெளியீட்டை ஒத்தி வைப்பதாக லைகா நிறுவனம் புத்தாண்டு அன்று தெரிவித்தனர். இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. படம் வருகிற பிப். 6 அன்று வெளியாகும் என்று டிரைலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து வருகிற ஏப். 10 அன்று அஜித் நடித்துள்ள அடுத்த படமான குட் பேட் அக்லி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.