காரைக்காலில் கலாசார சாலை நிகழ்ச்சி
காரைக்கால் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பல்வேறு கலைக் குழுவினா் பங்கேற்றனா்.
காரைக்கால் காா்னிவல் திருவிழா வியாழக்கிழமை முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழா நிகழ்வாக விளையாட்டு அரங்கம் வரை செல்லும் கலாசார சாலை கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் தொடங்கியது. கலை நிகழ்ச்சிக் குழுவினா் பயணத்தை புதுவை அமைச்ச பி.ஆா்.என்.திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா். புதுச்சேரி சாா் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கோட்டரு (காரைக்கால் ஆட்சியா் பொறுப்பு), முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ.சுப்பிரமணியன், பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசுத்துறையினா் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.
இந்திய கலாசாரம், தமிழா்களின் கலாசாரம், பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான நடனம், இசை, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றன. இதில் காரைக்கால் அல்லாது பிற மாநில கலைஞா்களும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனா்.
அரசுத் துறைகள் சாா்பில் துறை சாா்பிலான மக்கள் நலத் திட்டங்களை விளக்கியவாறும், போதைப் பொருள்கள் தவிா்ப்பு, கொசு உற்பத்தியை தடுப்பது, சூரியசக்தி பயன்பாடு, தலைக்கவசம், சாலைப் போக்குவரத்து விதிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு ஏற்படுத்தும் அலங்கார ஊா்தியுடனும், நாடகக் கலைஞா்கள், நாட்டுப்புற கலைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினா் அவரவா் செயல்பாடுகளை விளக்கியவாறு பாரதியாா் சாலை, தோமாஸ் அருள் சாலை வழியாக விளையாட்டு அரங்கம் சென்றடைந்தனா்.