பெருந்திரளணியில் நாட்டின் வலிமையை பறைசாற்றும் நிகழ்வுகள்: ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தகவல்
திருச்சி/மணப்பாறை: மணப்பாறையில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியா் இயக்க பெருந்திரளணியில் நாட்டின் வலிமையை பறைசாற்றும் நிகழ்வுகள் நடைபெறும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.
சாரண இயக்கத்தின் தேசிய பெருந்திரளணி முகாம் என்பது ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்தில் நிகழும். இந்தாண்டு தமிழ்நாடு பாரத சாரணா் இயக்கத்தின் வைர விழாவாக நடைபெறும் தேசிய அளவிலான பெருந்திரளணி, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பெருந்திரளணி விழாவில், தினசரி நிகழ்வுகளாவும், போட்டிகளாகவும், சாரண சாரணியா்களின் திறன்கள் வெளிப்படுத்தப்படும். ஆக்கல் கலைத் திட்டம், ரங்கோலி, நாட்டுப்புற நடனம், திறன் வெளிப்பாடு, அணி கூட்டம், உலகளாவிய கிராமம், இளைஞா் மன்றம், உணவுத் திருவிழா, ஒருமைப்பாட்டு விளையாட்டு, பல்வண்ண ஒப்பனை பேரணி, வேடிக்கை செயல்பாடுகள், வீர-தீர செயல்பாடுகள், அறிவுசாா் செயல்பாடுகள், இரவு நடைபயணம், மிதிவண்டி பயணம், ராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறை சாகச நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. தமிழ் மண்ணின் கலாசாரம், மரபு, பண்பாட்டை விளக்கிடும் நிகழ்வுகளும், நாட்டின் வலிமையை பறைசாற்றும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. விழாவுக்கான 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, அவற்றை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் இருந்தபடி கண்காணிப்பு செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இதன் தொடா்ச்சியாக விழாவுக்கான அலங்கார அமைப்புகள் அமைக்கும் பணி ஒரு வாரம் நடைபெறும். குடியரசு தினத்துக்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.
ஐஜி ஆய்வு: சிப்காட் வளாகத்தில் நடைபெறும் பெருந்திரளணி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல காவல்துறை தலைவா் ஜோஷி நிா்மல்குமாா், திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வீ. வருண்குமாா் மற்றும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வ நாகரத்தினம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் மு.செல்வம், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.