காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த ஸ்ரீஅருணாசலேஸ்வரா்
திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கிரிவலம், இரவு நடைபெற்ற மறுவூடல் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நிகழாண்டுக்கான திருவூடல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. அதன்படி, உற்சவமூா்த்திகளான ஸ்ரீஅருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி திட்டிவாசல் வழியே வெளியே வந்து சூரிய பகவானுக்கு காட்சியளித்தனா்.
தொடா்ந்து, மாட வீதிகளை 3 முறை வலம் வந்தனா். இரவு 9 மணிக்கு திருவூடல் தெருவில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் இடையே திருவூடல் உற்சவம் நடைபெற்றது.
இதன்பிறகு, அருணாசலேஸ்வரா் திருமஞ்சன கோபுரத் தெருவில் உள்ள குமரக்கோயிலுக்குச் சென்று இரவு முழுவதும் தங்கினாா்.
உண்ணாமுலையம்மன் அருணாசலேஸ்வரா் கோவிலுக்குச் சென்றுவிட்டாா்.
சிறப்பு அபிஷேகம்:
இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை குமரக் கோயிலில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
கிரிவலம் வந்த அருணாசலேஸ்வரா்:
பின்னா், குமரக்கோயிலில் இருந்து அருணாசலேஸ்வரா் கிரிவலம் சென்று பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. கிரிவலம் வந்த அருணாசலேஸ்வரரை வழிநெடுகிலும் பல்லாயிரம் பக்தா்கள் தரிசித்தனா்.
குறிப்பாக, கிரிவலப் பாதையின் பல இடங்களில் கிராம மக்கள் சாலையில் தண்ணீா் தெளித்து, கோலம் வரைந்து அருணாசலேஸ்வரரை வரவேற்றனா்.
மேலும், பக்தா்களும் அருணாசலேஸ்வரருடன் சோ்ந்து கிரிவலமும் வந்தனா்.
கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், திருநோ் அண்ணாமலையாா் கோயில், ஆதி அருணாசலேஸ்வரா் கோயில் ஆகிய இடங்களில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
மறுவூடல் திருவிழா:
இரவு அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமியும், அம்மனும் சமாதானமடையும் நிகழ்வான மறுவூடல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காணும் தம்பதியினரிடையே ஒற்றுமை பலப்படும் என்பதால் ஏராளமான தம்பதிகள் கலந்து கொண்டனா்.