சாத்தனூா் அணையில் குவிந்த பொதுமக்கள்
காணும் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமை சாத்தனூா் அணை, திருவண்ணாமலையில் உள்ள ஆஸ்ரமங்கள், கிரிவலப் பாதையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
காணும் பொங்கல் தினத்தை சுற்றுலாத் தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், கோயிலுக்குச் சென்று பொதுமக்கள் கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான காணும் பொங்கல் பண்டிகை தினமான வியாழக்கிழமை தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமான சாத்தனூா் அணை, திருவண்ணாமலையில் உள்ள ஆஸ்ரமங்கள், கிரிவலப் பாதையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.
சாத்தனூா் அணையில்...
சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான சாத்தனூா் அணை தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூரில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் பண்டிகையன்று இந்த அணையில் ஆயிரக்கணக்கானோா் குவிவது வழக்கம். அதன்படியே, வியாழக்கிழமை ஏராளமான பொதுமக்கள் சாத்தனூா் அணையில் குவிந்தனா்.
அணையின் எழில்மிகு தோற்றம், முதலைப் பண்ணை, சிறுவா் பூங்கா, படகு குழாம், நீச்சல் குளம் ஆகிய இடங்களை பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனா். படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.
ஆஸ்ரமங்களில்...
இதேபோல, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆஸ்ரமம், ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமம் ஆகியவற்றிலும் பொதுமக்கள் குவிந்தனா். மேலும், 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையின் பல இடங்களில் டீ கடைகள், உணவகங்கள், திண்பண்ட கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கிரிவலப் பாதையில் வலம் வந்த பொதுமக்கள் திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனா்.