Champions Trophy: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; இடம்பிடிப்பாரா கருண் நாயர்?...
சீன செஸ் மோசடி: 3 கிராண்ட்மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடை, 38 பேருக்கு அபராதம்!
சீன செஸ் போட்டிகளில் மோசடி செய்த 41 செஸ் வீரர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் விளையாடப்படும் சீன செஸ் (சியாங்கி) போட்டிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக 41 செஸ் வீரர்களுக்கு சிஎக்ஸ்ஏ (சீன சியாங்கி அசோசியேஷன்) அபராதம் விதித்துள்ளது. இதில் 3 கிராண்ட்மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடையும் 38 பேருக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜாகோ ஜின்ஜின், வாங் யங், ஜெங்க் வெய்டோங் ஆகிய மூன்று கிராண்ட்மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த 3 வீரர்களிடமிருந்த தொழில்நுட்ப பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மிதமான மோசடிகளில் ஈடுபட்ட 37 வீரர்கள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். 4 வீரர்களுக்கு கண்டனம் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபட்ட சீன கிராண்ட்மாஸ்டர்கள்
லஞ்சம் வாங்குதல், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த 41 சீன செஸ் வீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுமாதிரி நடைபெறுவது இது முதல்முறையல்ல. கடந்த செப்.2024இல் லஞ்சம் வாங்குதல், சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரபலமான சீன செஸ் வீரர்களான வாங் டியானி, வாங் யூபேய் ஆகிய இருவருக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீன செஸ் போட்டியில் மாக்னஸ் கார்ல்செனாக புகழப்படுபவர் வாங் டியானி. இவர் 4 முறை தேசிய சாம்பியனாகவும் 3 முறை உலக சாம்பியனாகவும் இருந்துள்ளார். டியானி பத்தாண்டுகளுக்கு நம்.1 வீரராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முறைக்கேட்டினால் இந்த விளையாட்டின் மீதிருக்கும் உண்மைத்தன்மைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
சூதாட்டத்தில் ஈடுபட காரணம் என்ன?
கடந்த ஏப்.2024இல் மோசடியில் ஈடுபட்டதாக பலரையும் சீன காவல்துறையினர் விசாரித்தனர். இதில் பல வீரர்கள், பயிற்சியாளர்கள் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
தரவரிசையில் தங்களை மேலிடத்திலேயே வைத்துக்கொள்ள குறைவான புள்ளிகள் கொண்ட வீரர்களிடம் பணம் கொடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒரு வீரர் கிராண்ட்மாஸ்டர் ஆகிவிட்டால் அவருக்கான போட்டிக்கான ஊதியம், வெற்றி பெற்றால் கூடுதல் ஊதியம் கிடைப்பதால் இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
விசாரணையில் இருக்கும் இன்னும் பல வீரர்கள் விதிமுறைக்கு புறம்பாக மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதியானால் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்களென சீன செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சீன செஸ் போட்டிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதுவும் செஸ் போட்டிகளைப் போலவே இரண்டு நபர்கள் விளையாடும் விளையாட்டுதான். இதில் 9*10 கட்டங்கள் கொண்டதாக இருக்கும். சாதாரண செஸ் போட்டியில் 8*8 கட்டங்கள் கொண்டதாக இருக்கும்.