ஷாருக் கான் வீட்டையும் குறிவைப்பா... சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைதா? - போலீஸ் சொல்வதென்ன?
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். கூர்மையான பிளேடால் தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சைஃப் அலிகானுக்கு டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேசன் செய்துள்ளனர். அவர் இன்று வரை தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தியால் குத்திய நபரை கைதுசெய்ய போலீஸார் 20 தனிப்படைகளை அமைத்திருந்தனர். மிகவும் பாதுகாப்புமிக்க வி.ஐ.பி.க்கள், பாலிவுட் பிரபலங்கள் தங்கி இருக்கும் மும்பை பாந்த்ரா பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், பாலிவுட் பிரபலங்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து பாந்த்ரா பகுதியில் இரவு நேர ரோந்து பணிக்கு கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். சைஃப் அலிகானை தாக்கியது தொடர்பாக விசாரித்து வரும் போலீஸார் அப்பகுதியில் வீடு புகுந்து திருடிய நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதில் பாந்த்ரா ரயில் நிலையம் அருகில் ஒருவர் விசாரணைக்காக பிடித்து வரப்பட்டுள்ளார். அந்த நபர்தான் சைஃப் அலிகானை தாக்கினாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் படமும் பிடிபட்டுள்ளவர் படமும் ஒத்துப்போகிறது. சைஃப் அலிகானை குத்திய நபர் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறார். சைஃப் அலிகானை குத்திய நபர் தனது சட்டையை மாற்றிவிட்டு சென்று இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே அவரை பிடிக்க மேற்கு புறநகரில் உள்ள வசாய் மற்றும் நாலாசோபாரா பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சைஃப் அலிகானும், அவரது வீட்டில் இருந்த வேலைக்காரர்களும் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்த நபருடன் 30 நிமிடம் சண்டையிட்டுள்ளனர். அவரைப் பிடித்து அறையில் அடைக்க முயற்சி செய்துள்ளனர். அந்நேரம் சைஃப் அலிகான் பிளேடால் குத்தப்பட்டதால் கீழே விழுந்துவிட்டார். அவரை மருத்துவமனையில் சேர்க்க முயன்ற போது அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
ஷாருக் கான் வீட்டில் வேவு
சைஃப் அலிகான் வீட்டு சம்பவத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக் கான் வீட்டு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் இரும்பு ஏணி ஒன்றை பயன்படுத்தி ஷாருக் கான் வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் வேவு பார்த்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த நபர்தான் சைஃப் அலிகான் வீட்டிலும் நுழைந்திருக்கவேண்டும் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். அதோடு அந்த ஏணி மிகவும் அதிக எடை கொண்டதாக இருந்தது. எனவே இக்காரியத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருக்கவேண்டும் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஷாருக் கான் இது குறித்து புகார் செய்யவில்லை. ஏணி திருடி வரப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.