`தனிமையில் சந்திக்க வற்புறுத்திய மாமா' -தற்கொலை செய்துகொண்ட 24 வயதுப் பெண்! - பெங்களூரில் சோகம்!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் குண்டலஹள்ளி மெட்ரோ அருகில் தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் அறையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த 24 வயதுப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரித்து வருகிறது.
முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை, ``தற்கொலை செய்துகொண்டப் பெண், கடந்த ஆறு வருடங்களாக அவருடைய மாமா - அத்தையுடன் வசித்து வருவதாக, அந்தப் பெண்ணின் தாயார் தெரிவித்திருக்கிறார். அவர்களுடன் அடிக்கடி சுற்றுலா சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தப் பெண் தொடர்பான தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோகள் அவரின் மாமா - அத்தையிடம் இருந்ததாக தெரிகிறது. அதை அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்து விடுவதாக மிரட்டியிருக்கிறார்கள். மேலும், தனியார் ஹோட்டலில், அந்தப் பெண்ணை தனிமையில் சந்திக்க வேண்டுமென, அந்தப் பெண்ணின் மாமா தெரிவித்திருக்கிறார். இதனால் விரக்தியடைந்தப் அந்தப் பெண், கையில் பெட்ரோலுடன் அவரின் மாமாவை சந்திக்கச் சென்றிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பெண் பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
தீவிர படுகாயத்துடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்போது குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து ஒரு பென்டிரைவ் கைப்பற்றியிருக்கிறோம். மேலும், அவர் மீதும், அவரின் மனைவி மீதும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடந்து வருகிறது." எனத் தெரிவித்திருக்கிறது.