BB 8 பவித்ராவின் தூர்தர்ஷன் நாள்கள்: `25ஜி பஸ்ல ஷூட்டிங் வருவாங்க' - 'கோலங்கள்' ஶ்ரீதர், யோகேஷ்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 ன் ஃபினாலே ஷூட் நாளை நடக்கவிருக்கிறது. முதல் நாள் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஆறு பேர் சேர்ந்தார்கள். தொடர்ந்து எவிக்ஷன் புராசஸ் மூலம் ஒவ்வொருவராக வெளியேறினர்.
வைலடு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் நுழைந்த ரயான் டிக்கெட் டூ ஃபினாலே மூலம் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்ட நிலையில், கடைசி வாரத்தில் பணப்பெட்டி வைக்கப்பட்டது.
இந்தாண்டு ஒரே நபர் மொத்தப் பணத்தையும் எடுத்துச் செல்ல முடியாதபடி புதிய விதிகளைப் புகுத்தினார் பிக் பாஸ். அதன்படி முத்துக்குமரன் 50,000 ரூபாயும், விஷால் 5 லட்சம், பவித்ரா ஜனனி 2 லட்சம் ரூபாயும் எடுத்துக் கொண்டதுடன் நிகழ்ச்சியிலும் தொடர்கின்றனர்.
சௌந்தர்யா பணத்தை எடுக்காமல் ஆனால் குறித்த நேரத்தில் திரும்பி விட்டதால் அவருமே நிகழ்ச்சியில் தொடர்கிறார்.
ஆனால் ஜாக்குலின் 8 லட்சத்தை எடுக்க முயன்று தோல்வியடைந்ததால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இப்போது சௌந்தர்யா, பவித்ரா ஜனனி, விஷால், முத்துக்குமரன், ரயான் ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்குத் தயாராக இருக்கின்றனர்.
இவர்களின் முத்துக்குமரனுக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் ஆதரவு பெரியளவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல் சௌந்தர்யாவுக்கும் ஒவ்வொரு முறையும் ஓட்டு வாங்கி எவிக்ஷனில் தப்பித்து வந்து விட்டார்.
ரயான் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் வந்தாலும் டிக்கெட் டூ ஃபினாலேவுக்குத் தகுதி பெற்றதால் அவருமே டாப் 5க்குள் வந்து விட்டார்.
பவித்ரா ஜனனி, விஷால் இருவரும் டாப் 5 பேரில் வந்ததைத்தான் பிக்பாஸ் ரசிகர்களிலேயே பலராலும் நம்ப முடியவில்லை. பணப்பெட்டி டாஸ்க்கை இருவரும் சிறப்பாகச் செய்தாலும நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்களில் இருவருமே விமர்சனங்களையே சந்தித்து வந்தார்கள்.
பவித்ரா
பவித்ராவைப் பொறுத்தவரை நிகழ்ச்சிக்கென எந்த மெனக்கெடலும் செய்யாமலேயே இருக்கிறார்; அதையே அவர் சேஃப் கேம் என நினைக்கிறார்' என்ற விமர்சனக்ன்கள் அவர் மீது வந்தன. ஆனால் அவர், `இது தான் நான். நான் நானாக இருப்பது தான் என்னுடைய கேம்’ என முதலில் இருந்தே சொல்லி வருகிறார்,
இந்தச் சூழலில் பவித்ராவின் முதல் சீரியலில் அவருடன் நடித்த 'கொலங்கள்' ஶ்ரீதர் மற்றும் அந்தத் தொடரில் பவித்ராவுக்கு ஜோடியாக நடித்த யோகேஷ் இருவரிடமும் பேசினோம்.
''நிழல்' தான் பவித்ரா முதன் முதலா ஹீரோயினா நடிச்ச சீரியல். அதுல எனக்கு நெகடிவ் கேரக்டர். தூர்தர்ஷன் ஆபீஸ்லதான் ஷூட்டிங் இருக்கும். புதுசா ஃபீல்டுக்கு வந்ததால ஷூட்டிங் ஸ்பாட்ல அமைதியாகவே இருப்பாங்க. நாங்க கூட ஜாலியா ரேக்கிங் லாம் பண்ணுவோம். கொஞ்சம் எமோஷனலான பொண்ணும் கூட... அந்த சீரியலுக்குப் பிறகு விஜய் டிவிக்கு வந்து 'ஆபிஸ்', 'ஈரமான ரோஜாவே' நிறைய தொடர்கள் பண்ணி இப்ப பிக்பாஸ் வரைக்கும் வந்திருக்காங்க. நான் பார்த்த வரை ஷோவுல அவங்க எக்ஸ்ட்ராவா நடிக்கல. அதனால அவங்க டைட்டிலுக்குத் தகுதியானவங்கதான்'' என்கிறார் ஶ்ரீதர்.
யோகேஷிடம் பேசிய போது,
''எட்டு வருசத்துக்கு முன்னாடி ஒளிபரப்பான அந்தத் தொடர் 300 எபிசோடுகளுக்கும் அதிகமா ஒளிபரப்பாச்சு. சீரியல்ல கண் தெரியாத என்னைக் காதலிக்கிற கேரக்டர் அவங்களுக்கு. காலேஜ் படிச்சிட்டே நடிப்பு மீதான ஆரவத்துல சீரியல்ல கமிட் ஆகி நடிக்க வந்தாங்க. போரூர் பக்கம் அவங்க வீடு இருந்தது. 25 ஜி பஸ்லதான் தினமும் ஷூட்டிங் வந்துட்டுப் போயிட்டிருந்தாங்க.
நடிப்புல பெரியளவுல வரணும்கிற ஆர்வம் அப்பவே இருந்தது. பிக்பாஸ் ஷோவுல நூறு நாள் இருந்திருக்காங்கன்னா ரசிகர்கள் ஆதரவு இல்லாம அது எப்படி சாத்தியமாகும்? என்னுடைய ஹீரோயின்ங்கிறதுக்காகச் சொல்லலை, இப்ப இருக்கிற டாப் 5 பேரில் வலுவான ஒரு போட்டியாளராகவே இவங்களை நான் பார்க்குறேன்' என்கிறார் யோகேஷ்.