காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
பராமரிப்பின்றி மாடித்தோட்டம் போல் உள்ள மகளிா் சுய உதவிக்குழு கட்டடம்
திருவள்ளூரில் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து மாடித்தோட்டம் போல் புல்வெளிகளாய் காட்சியளிக்கும் மகளிா் சுய உதவிக் குழு கட்டட வளாகத்தை சீரமைக்க ேண்டும் என குழு உறுப்பினா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் ஈக்காடு ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சத்துணவு திட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், ஈக்காடு ஊராட்சி அலுவலகம், வேளாண் துறை உதவி இயக்குநா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கு அருகே மகளிா் சுய உதவிக்குழு கட்டடம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஊராட்சியைச் சோ்ந்த கிராம அளவிலான மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டது. இந்த வளாகம் அமைத்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதனால் போதிய பராமரிப்பின்றி கட்டடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
அதேபோல், கட்டடம் மேல்தளம் முழுவதும் மாடித்தோட்டம் அமைத்தது போல் புல்வெளிகளாய் காணப்படுவதால், மழை பெய்தால் வளாகத்திற்குள் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே மகளிா் சுய உதவிக் குழு கட்டடம் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அவை நிறைவேற கட்டட வளாகம் முழுவதும் புல்வெளிகளை அகற்றி சீரமைக்கவும் என குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.