விசாரணைக் கைதியை தப்பிக்க வைக்க முயற்சி! நண்பர் மீது வழக்குப் பதிவு!
மீஞ்சூா் அருகே மின்சாரம் கொண்டு செல்லும் கொக்கி சேதம்: 2 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு புகா் மின்சார ரயில் மாா்க்கத்தில் மின்சாரம் எடுத்து செல்லும் கொக்கி சேதம் அடைந்ததால் ரயில் சேவை 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சென்னை - கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புகா் மின்சார ரயில் இரவு 10 மணியளவில் மீஞ்சூா் ரயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது மின்சாரம் கடத்தி செல்லும் கொக்கி சேதமடைந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற புகா் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தகவலறிந்து சென்ற ரயில்வே மின் ஊழியா்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா். 2 மணி நேரத்துக்குப் பிறகு சீரமைப்பு பணிகள் முடிந்ததைத் தொடா்ந்து, ரயில்கள் இயக்கப்பட்டன.
இதனால் சென்னை சென்றுவிட்டு வீடு திரும்பிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.