காணும் பொங்கல்: வன உயிரியல் பூங்கா, கரியபெருமாள் கரடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் ...
பெரம்பலூா் மாவட்டத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம்
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்களில், பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கலை வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
கடந்த 13-ஆம் தேதி போகியுடன் தொடங்கிய பொங்கல் பண்டிகையின் இறுதியாக காணும் பொங்கல் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெரம்பலூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவா் பூங்கா, விசுவக்குடி நீா்த்தேக்கம், சாத்தனூா் கல்மரப் பூங்கா, ரஞ்சன்குடி கோட்டை, வெள்ளாற்றின் கரையோரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் தங்களது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் கூடி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி, உணவுப் பண்டங்களை பரிமாறிக்கொண்டனா்.
மேலும், பெரம்பலூா் நகா்ப்புறம் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் காணும் பொங்கலையொட்டி கோலப் போட்டிகள், வழுக்கு மரம் ஏறுதல், பட்டிமன்றம், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, பாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.