காரைக்கால் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
காணும் பொங்கல் தினத்தில் ஆயிரக்கணக்கானோா் காரைக்கால் கடற்கரைக்கு வருகை தருவா் என்பதால், கடலில் நீராடத் தடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
பொங்கல் விழாவின் 3-ஆம் நாளான காணும் பொங்கல் (வியாழக்கிழமை) தினத்தில் கடற்கரை மற்றும் பிற சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்வது வழக்கம். கடற்கரைக்கு பகல் 12 மணி முதல் திரளான மக்கள் வரத் தொடங்குவா். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிக்கும்.
காரைக்கால் பகுதியில் கடலில் நீராடுவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. கடந்த மாதம் அலை சீற்றத்தில் சிக்கி 2 போ் உயிரிழந்தனா்.
இதனால், காணும் பொங்கலன்று கடலில் மக்கள் நீராடுவதை தடுக்க காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தையொட்டி கொட்டப்பட்டிருக்கும் கருங்கற்கள் மீது நடந்து எல்லை வரை சென்று தற்படம் ( செல்ஃபி) எடுப்பது பலருக்கு வழக்கம். இதையும் தடுக்கும் விதமாக சவுக்கு மரங்களைக்கொண்டு தடுப்பை காவல்துறை அமைத்துள்ளது.
எச்சரிக்கை விடுக்கும் விதமாக, கடற்கரையில் ஆங்காங்கே கடலில் நீராடவேண்டாம் எனவும், ஏற்கெனவே கடலில் நீராடும்போது உயிரிழந்தோா் படத்தையும் பதாகையில் வெளியிட்டு ஆங்காங்கே வைத்துள்ளனா். மாட்டுப் பொங்கல் தினத்தில் கடற்கரைக்கு வந்தவா்களை, கடலில் இறங்கி நீராடுவதை தடுக்கும் விதமாக ஒலிபெருக்கி வாயிலாக போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.