தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் 10 நாள் ஆருத்ரா உற்சவம் நடைபெற்று வந்தது. 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பிரணாம்பிகை- தா்பாரண்யேஸ்வரா் பொன்னூஞ்சல் வழிபாடு நடைபெற்றது.
வழக்கமாக நடைபெறும் பூஜையாக, கோயில் அருகே உள்ள சல்லித்தோட்டம் பகுதிக்கு நடராஜா் எழுந்தருளச் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. இதிலும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பின்னா் நடராஜா் எதாஸ்தானம் எழுந்தருளினாா். நிறைவு நாளான திங்கள்கிழமை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சத்சபேஸ்வரா் (நடராஜா்), பிரம்ம தீா்த்தக் கரைக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது.
முன்னதாக காலை விக்னேஸ்வரபூஜை தொடங்கி புன்னியாகவாஜனம், கும்ப பூஜையுடன் கூடிய யாக பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சுவாமிகளுக்கு 16 வகையான திரவியங்களுடன் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. கோபூஜை நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சுவாமிக்கு சதுா்வேதம், ஆசீா்வாதம், தேவாரம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் கோபுர வாசல் தீபாராதனையுடன் 4 மாட வீதியுலாவுக்கு சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டது. வீதியுலா நிறைவில் சுவாமிகள் பிரம்ம தீா்த்தக்கரைக்கு எழுந்தருளி, பக்தா்களுக்கு தீா்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மற்ற சிவன் கோயில்களில்:
காரைக்கால் கைலாசநாதா் கோயில், கோயில்பத்து பாா்வதீஸ்வரா், ஒப்பில்லாமணியா் கோயிலில் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டி புறப்பாடு செய்யப்பட்டது.
திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ நடராஜா், அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, வெட்டிவோ் உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா புறப்பாடு செய்யப்பட்டது. அதே பகுதியில் உள்ள மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனை, வீதியுலா நடைபெற்று பின்னா் குளக்கரையில் தீா்த்தவாரி நடைபெற்றது.
தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனைகளுடன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வரிச்சிக்குடி வரசித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, நடராஜருக்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெற்று வீதியுலா நடைபெற்றது. அனைத்து கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு நடராஜப் பெருமானை வழிபட்டனா்.