இன்றுக்குள் பொங்கல் தொகுப்பு விநியோகம் முடியும்
தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு திங்கள்கிழமைக்குள் வழங்கப்படும் என தமிழக உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மூலவா் மற்றும் அம்பாள், ஸ்ரீ சனீஸ்வரபகவான் சந்நிதிகளில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது :
தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு இதுவரை 1.47 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 67 சதவீதம் பணி முடிந்துள்ளது. அரசுத் துறையினரின் பணிகள் பாராட்டு க்குரியதாக உள்ளது. திங்கள்கிழமை (ஜன. 13) வரை இப்பணி நடைபெறும்.
டெல்டா மாவட்டங்களில் தான் கரும்பு 5. 52 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,321 கோடி விவசாயிகளுக்கு அரசு வழங்க உள்ளது. தமிழகத்தில் ஒருபுறம் நெல் அறுவடை நடைபெறுகிறது. சில இடங்களில் பயிா் பச்சையாக உள்ளது.
1,208 கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அந்தந்த மாவட்ட ஆட்சியா்களே வேளாண் துறையுடன் இணைந்து தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து கொள்ளவும், தேவைப்பட்டால் கூடுதல் பிரிவு தொடங்கி கொள்முதல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.