போலி ஆதாா் அட்டைகளுடன் தங்கியிருந்த 31 வங்கதேசத்தினா் கைது
பல்லடம் அருகே அருள்புரம் மற்றும் திருப்பூா் பகுதிகளில் போலி ஆதாா் அட்டைகளுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 31 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருள்புரம் பகுதியில் ஏரளாமான பனியன் நிறுவனங்கள், சாய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி போலி ஆதாா் அட்டை மூலம் வீடு எடுத்து சிலா் வசிப்பதாகவும், சில காலம் கழித்து இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவதாகவும் புகாா்கள் வந்தன. இதையடுத்து, திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக தங்கி உள்ளவா்களை போலீஸாா் கண்டறிந்து கைது செய்து வருகின்றனா்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம், ஊத்துக்குளி, மங்கலம் பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் இயங்கி வரும் தனியாா் பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் போலியான ஆதாா் அட்டைகளைக் கொடுத்து பணியாற்றி வருவதாக கோவை தீவிரவாத தடுப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆனந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் பல்லடம் பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த சலீம் (26), ரபீக் (21), முகமது குத்தூஸ் (40), முகமது அபில் (22), முகமது பரூக்(27) உள்பட 28 போ் மற்றும் திருப்பூா் மாநகா் பகுதியில் தங்கியிருந்த 3 போ் என மொத்தம் 31 வங்கதேசத்தினரைக் கைது செய்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.