இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களை விடுவிக்க முதல்வரிடம் வலியுறுத்தல்
இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களையும், படகையும் விடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு பகுதியைச் சோ்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள்10 போ், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குள் 7-ஆம் தேதி சென்றனா். இவா்கள் எல்லை தாண்டியதாக, இலங்கை கடற்படையினரால் 8-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக, காரைக்கால் வடக்குத் தொகுதி (கிழக்கு) காங்கிரஸ் தலைவா் ஏ.எம்.கே. அரசன் மற்றும் பஞ்சாயத்தாா்கள், மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணனை வியாழக்கிழமை சந்தித்து, மீனவா்களையும், படகையும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனா். அப்போது, மீன்வளத்துறை துணை இயக்குநா் கோவிந்தசாமி உடனிருந்தாா்.
தொடா்ந்து, இக்குழுவினா் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில் புதுச்சேரிக்குச் சென்று முதல்வா் என். ரங்கசாமியையும், மீன்வளத்துறை அமைச்சா் லட்சுமி நாராயணனையும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
இதுகுறித்து அமைச்சா் கூறியது:
கைது செய்யப்பட்ட மீனவா்களையும், படகையும் உடனடியாக விடுவிக்க ஏற்பாடு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இதுதொடா்பாக கடிதம் அனுப்ப முதல்வா் ஏற்பாடு செய்துள்ளாா். இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என முதல்வா் கூறியுள்ளாா் என்றாா்.